23 அக்., 2010

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சிவிசி பரிந்துரை

புதுடெல்லி,அக்.23:காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டில் நடந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) பரிந்துரை செய்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக 70 ஆயிரம் கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களில் பெரிய அளவில் நிதி மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளின் ஒளிபரப்பு ஒப்பந்த உரிமை பிரிட்டனைச் சேர்ந்த எஸ்ஐஎஸ் லைவ் என்ற ஒளிபரப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக இந்நிறுவனத்துக்கு 246 கோடி வழங்கப்பட்டது. இதில் இந்த நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனம் சுமார் 29 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனத்துடன் தொடர்புடைய இந்திய நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த மோசடி குறித்து தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் நிதி ஆவணங்களை ஆய்வு செய்தபோது இரட்டை வரிவிதிப்பு முறையை காரணம் காட்டி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்தும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்புடைய திட்டங்களில் நடைபெற்ற கிரிமினல் சதித்திட்டம் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சிவிசி பரிந்துரைத்துள்ளது. இதில் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் நிறுவனத்தின் கிளையுடன் ஒளிபரப்புக்கான ஒப்பந்தத்தை செய்துகொள்ள தூர்தர்ஷனுக்கு பிரசார் பாரதி அனுமதி வழங்கியது.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்தும்போது வரிப்பிடித்தம் செய்யுமாறு வருமானவரித் துறை கேட்டுக்கொண்டது. ஆனால் அவ்வாறு வரிப்பிடித்தம் செய்யப்படாமல் ஒப்பந்த தொகை முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் பிரசார் பாரதி வழங்கிய ஒப்பந்தத் தொகை குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கான தொகையை செலுத்துவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று பிரசார் பாரதியின் தலைமை செயல் அலுவலர் பி.எஸ்.லல்லி தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒப்பந்தங்கள் வழங்குவதில் பல வகைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவரும் என்பதால் இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சிவிசி பரிந்துரைத்துள்ளது. கட்டுமானங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாடகைக்கு வாங்கியதிலும் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சிவிசி பரிந்துரை"

கருத்துரையிடுக