23 அக்., 2010

நிலவில் அதிக நீர் ஆதாரம்: நாசா உறுதி

வாஷிங்டன்,அக்.23:கடந்த ஆண்டு இந்தியாவின் சந்திராயன் விண்கலம் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தது. ஏறக்குறைய ஓராண்டு கடந்துள்ள நிலையில் நாசா விஞ்ஞானிகள், நிலவில் அதிக அளவில் நீர் ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். ஏற்கெனவே நினைத்திருந்த அளவைக் காட்டிலும் அதிகமான அளவில் நீர் வளம் அங்கு இருப்பதாக நாசா வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆராய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய விண்கலம் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. நிலவில் நிழற்பகுதியில் நீர், மண் மற்றும் பிற உபயோகமான தாதுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் நிலவில் ரசாயன ரீதியில் மாற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்கு நீர் சுழற்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிலவில் பெரும்பாலும் தூய்மையான ஐஸ் கட்டிகளாக சில இடங்களில் இருப்பதாகவும் நாசா வெளியிட்ட 6 பக்க அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த விவரம் முழுவதையும் 'சயின்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.

நிலவின் நிழல் பரப்பில் ஐஸ் கட்டிகளாகவும், சில இடங்களில் தண்ணீராகவும் உள்ளதையும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானக் குழுவின் தலைவர் மைக்கேல் வார்கோ தெரிவித்தார்.

நிலவிலிருந்து விண்கலம் கொண்டு வந்த சில பகுதிகளில் சூரிய வெளிச்சமே பல்லாயிரம் ஆண்டுகள் படாதது தெரியவந்துள்ளது. இதனாலேயே இங்குள்ள நீர், ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். நிலவில் கடந்த காலங்களில் நீர் உருவாகி அது பணியாக உறைந்திருக்கலாம். அல்லது ரசாயன மாற்றங்களால் மிக அதிக அளவில் பனி உருவாகி இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று இந்த ஆராய்ச்சித் திட்ட முதன்மை ஆய்வாளர் அன்டனி கொலபிரெட் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பனிக் கட்டிகளை தண்ணீராக மாற்றி நிலவில் மனிதன் வசிக்க முடியுமா? என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நிலவில் மிக அதிக அளவில் கிடைக்கும் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன் வாயுக்களைக் எரிபொருளாக மாற்றி வாழ்வது குறித்த ஆராய்ச்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலவில் காணப்படும் வாழ்வியல் சூழல் மற்றும் அங்கு நிலவும் தட்ப வெப்பம் உள்ளிட்டவை குறித்தும் ஆராயப்படுகிறது. நிலவில் தண்ணீர் உருவானது எப்படி, அங்கு பனிக் கட்டிகள் அதிக அளவில் காணப்படுவது எதனால் என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நிலவில் அதிக நீர் ஆதாரம்: நாசா உறுதி"

கருத்துரையிடுக