27 அக்., 2010

ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக திமுக எம்.பி கையெழுத்தா?

சென்னை,அக்.27:ராமர் கோயில் கட்ட திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் ஆதரவு தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி குறித்து, அவரிடம் கட்சித் தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி மாவட்ட பொறுப்பாளர்கள் கடந்த வாரத்தில் ஹெலன் டேவிட்சனை சந்தித்து மனு அளித்தனர்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ஸ்ரீ ராமஜென்ம பூமியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்போது நிரந்தர பூஜை நடந்துவரும் இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஹிந்துக்களின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். துணைத் தலைவர் ஸ்ரீனிவாச கண்ணன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலர் என். காளியப்பன், வித்யா பாரதி மாநிலத் தலைவர் குமாரசாமி, ஆர்.எஸ்.எஸ். மகளிர் பிரிவு நிர்வாகி பிரேமா, பி.எம்.எஸ். மாவட்ட பொதுச்செயலர் பத்மநாபபிள்ளை, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் உள்ளிட்டோர் மனு அளித்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த கையெழுத்து இயக்கத்தில் திமுகவைச் சேர்ந்த கன்னியாகுமரி எம்.பி., ஹெலன் டேவிட்சனும் கையெழுத்திட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று திமுக தலைமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாக கையெழுத்திடவில்லை
இது தொடர்பாக ஹெலன் டேவிட்சன் கூறியதாவது:
"மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் பலர் வந்து என்னிடம் மனு அளிக்கிறார்கள். அதுபோலவே ஸ்ரீஅனுமன் சக்தி ஜாகரன் சமிதி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் தலைமையில் ஒரு குழுவினர் வந்து மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில்தான் கையெழுத்திட்டிருந்தேன். ஆனால், அதை சிலர் திரித்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து நான் கையெழுத்திடவில்லை. திமுக தலைமைக் கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை (அக்டோபர் 27) விரிவான விளக்கம் அனுப்பவுள்ளேன்" என்றார் ஹெலன் டேவிட்சன்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக திமுக எம்.பி கையெழுத்தா?"

கருத்துரையிடுக