13 அக்., 2010

இஷ்ரத் ஜஹான் - லஷ்கர் தற்கொலைப்படை போராளியா?

அஹ்மதாபாத்தில் வைத்து குஜராத் போலீஸாரின் போலி என்கவுண்டரில் அநியாயமாக கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் இளம்பெண் லஷ்கரே-இ-தய்யிபா என்ற பாகிஸ்தான் போராளி இயக்கத்தின் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற பிரச்சாரம் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. இது போலி என்கவுண்டர் படுகொலைகளுக்கு எதிராக போராடிவரும் மனித உரிமைப் போராளிகளை ஆசுவாசப்படுத்தியுள்ள செய்தியாகும்.

அமெரிக்காவின் இரட்டை ஏஜண்டும், மும்பை தாக்குதலுக்கு சூத்திரதாரியாக கருதப்படுபவருமான டேவிட் கோல்மான் ஹெட்லிக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு ஏஜன்சி இஷ்ரத்தைக் குறித்து எவ்வித விமர்சனத்தையும் மேற்கொள்ளவில்லை.

லஷ்கர்-இ-தய்யிபா என்ற பாகிஸ்தான் போராளி இயக்கத்தின் தற்கொலைப்படை தீவிரவாதிதான் இஷ்ரத் ஜஹான் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சில அதிகாரிகளும், சில தேசிய ஊடகங்களும் பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

மும்பையில் கல்ஸா கல்லூரியின் மாணவியான இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேரையும் சுட்டுக் கொன்றது, சொஹ்ரபுத்தீன் ஷேக்-கவ்ஸர்பீ போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வன்சாரா தலைமையிலான குஜராத் போலீஸ் கும்பலாகும்.

முதல்வர் நரேந்திர மோடியை கொல்லவந்த அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்த பொழுது தற்காப்பிற்காக சுட்டதில் 4 பேரும் மரணமடைந்ததாக குஜராத் போலீஸ் அவதூறாக பிரச்சாரம் செய்தது.

சூழ்நிலை ஆதாரங்கள் அனைத்தும் குஜராத் போலீஸிற்கெதிராக இருந்தபொழுதிலும், தொடர் நடவடிக்கை எடுக்க நரேந்திர மோடியின் அரசு தயாரில்லை. இஷ்ரத்தின் உறவினர்கள் நீதிக்கேட்டு நீதிமன்றத்தை அணுகிய பொழுதுதான் அப்பாவிகளான 4 பேரை வன்சார தலைமையிலான குஜராத் போலீஸ் கும்பல் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங் தனது 243 பக்க தீர்ப்பில், நரேந்திரமோடியிடம் நல்லபெயர் வாங்கி, பதவி உயர்வு பெறுவதற்காக போலீஸ் அதிகாரிகள் போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றியிருப்பது வெட்ட வெளிச்சமானது.

வன்சாரா உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள்தான் இந்த அநியாய படுகொலைகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக்குழு இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் இஷ்ரத் லஷ்கர்-இ-தய்யிபாவின் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற பொய்ப் பிரச்சாரம் கிளப்பப்பட்டது.

இஷ்ரத் ஜஹான் உட்பட 4 அப்பாவிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியவுடனேயே டெல்லியில் உள்ள சில முக்கிய புள்ளிகள் இதனைக் குறித்து அறிந்திருந்தனர் என்ற சந்தேகத்தை சில மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டிருந்தனர்.

ஹெட்லி தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் இஷ்ரத்தைக் குறித்து லஷ்கர்-இ-தய்யிபாவின் தற்கொலைப்படை தீவிரவாதி என்று குறிப்பிட்டதாக வெளியான பொய்ப் பிரச்சாரத்தின் பின்னணியிலும் இவர்கள்தான் செயல்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் தற்பொழுது வலுவடைந்துள்ளது.

பாரபட்சமற்ற, நீதியின் அடிப்படையிலான விசாரணையை மேற்கொண்டு 4 அப்பாவிகளை அநியாயமாக படுகொலைச் செய்த குற்றவாளிகளை கைதுச் செய்து நீதிபீடத்தின் முன் ஆஜராக்கி தண்டிக்கப்படுவதன் மூலமாகத்தான் இத்தகைய அநியாயப் படுகொலைகளும், பொய்ப் பிரச்சாரங்களும் முடிவுக்கு வரும்.
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஷ்ரத் ஜஹான் - லஷ்கர் தற்கொலைப்படை போராளியா?"

கருத்துரையிடுக