30 அக்., 2010

பங்களாதேஷ்:மூத்த ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்கள் கைது

டாக்கா,அக்.30:பங்களாதேசில் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர்கள் 20 பேரை அந்நாட்டு பாதுகாப்புப்படை கைதுச் செய்துள்ளது.

1971 ஆம் ஆண்டு பங்களாதேசின் விடுதலைக்காக நடந்த போராட்டத்தின் போது மனிதத் தன்மையற்ற குற்றங்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டி ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களை விசாரணைச் செய்யவிருப்பதாக தகவல் வெளியான சூழலில் இந்த கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரகசிய கூட்டம் நடத்த திட்டமிட்ட வேளையில் மிர்பூரில் ஒரு கட்டிடத்திலிருந்து இவர்களை கைதுச் செய்ததாக டாக்கா மெட்ரோ போலீஸ் அடிசனல் டெபுட்டி கமிஷனர் கூறுகிறார். சோதனையின்போது வெடிக்குண்டு போன்றதொரு பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைமையிலான முந்தைய அரசில் கூட்டணிக் கட்சியாக இருந்தது ஜமாஅத்தே இஸ்லாமி. கைதுச் செய்யப்பட்டவர்களுக்கெதிராக உரிய நேரத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்படும் என போலீஸ் அறிவித்துள்ளது.

ஜமாஅத்தே இஸ்லாமியின் துணைச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான முஜிபுர்ரஹ்மான், ஜமாஅத்தே இஸ்லாமி குலீனா சிட்டி யூனிட் தலைவர் ஷஃபீக்குல் ஆலமும் கைதுச் செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

கைதுத் தொடர்பாக கூடுதல் விபரங்கள் பின்னர் வெளிப்படுத்தப்படும் என அவர் கூறினார்.

1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைக்கான போரில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை விசாரணைச் செய்ய அவாமி லீக் தலைமையிலான அரசு மார்ச் 25-ஆம் தேதி சிறப்பு தீர்ப்பாயத்தை உருவாக்கியிருந்தது. ஜமாஅத்தே இஸ்லாமியும், இதர அமைப்புகளும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் முதீவுர்ரஹ்மான் நிஸாமி, பொதுச்செயலாளர் அலி அஹ்ஸன் முஹம்மது முஜாஹித், தல்வார் ஹுசைன் ஸயீதி, முஹம்மது கமருஸ்ஸமான், அப்துல் காதர் முல்லா ஆகிய ஐந்து தலைவர்களை விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் முதல் சிறையில் அடைத்திருக்கிறது பங்களாதேஷ் அரசு.

உள்ளூர் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டு இரண்டு லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக ஆதாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1971 ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி பங்களாதேஷ்(முன்பு கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது) மேற்கு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. மதத்தின் அடிப்படையில் கட்சிகள் செயல்படுவது சட்டவிரோதம் என சமீபத்தில் பங்களாதேஷ் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியின் நிலைமை அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில்தான் இந்த கைது நடவடிக்கைகள். ஜமாஅத்தே இஸ்லாமியின் பதிவுக் குறித்து மறுபரிசீலனைச் செய்யவேண்டியதன் பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளதாக சட்ட அமைச்சர் ஷஃபீக் அஹ்மத் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தலில் போட்டியிடும் பொழுதே இவ்விவகாரம் பரிசீலிக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பங்களாதேஷ்:மூத்த ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்கள் கைது"

கருத்துரையிடுக