15 அக்., 2010

காமன்வெல்த் போட்டியில் இந்தியா மகத்தான சாதனை, கலக்கலான நிறைவு விழா

புதுடெல்லி,அக்.15:டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகலமான கலை நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவு பெற்றது. பதக்க பட்டியலில் 38 தங்கப்பதக்கங்கள் உட்பட 101 பதக்கங்களை பெற்று, இரண்டாவது இடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் என்ற எந்த சர்வதேச போட்டிகளிலும் இந்தியா அதிக பதக்கங்களை வெல்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இதனால்தான், கிரிக்கெட்டில் மக்கள் காட்டிய ஆர்வத்தை மற்ற போட்டிகளில் காட்டவில்லை. கடந்த 1982ம் ஆண்டு டெல்லியில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. அதிலும் 14 தங்கப்பதக்கங்களை வென்று 6வது இடத்தைதான் இந்தியா பிடித்தது.

இந்தியாவில் முதல் முறையாக நடந்த இந்த போட்டித் தொடரில் (அக்.3-14), காமன்வெல்த் உறுப்பினர் நாடுகளை சேர்ந்த மொத்தம் 71 அணிகள் களமிறங்கின. ஏழாயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.

நீச்சல், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்சில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்தே அதிக பதக்கங்களைக் குவித்து முதலிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்திய அணி அதிக பதக்கங்களை குவிக்கத் தொடங்கியதால் 2வது இடத்துக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இங்கிலாந்து, இந்தியா மாறி மாறி 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

போட்டி முடிவதற்கு ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் இங்கிலாந்து 37 தங்கப்பதக்கங்களுடன் 2வது இடத்திலும், இந்தியா 36 தங்கப்பதக்கங்களுடன் 3வது இடத்திலும் இருந்தன. கடைசி நாளான நேற்று மகளிர் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் ஜ்வாலா & அஸ்வினி ஜோடியும், ஒற்றையர் பிரிவில் சாய்னா நெஹ்வாலும் தங்கம் வென்றதை அடுத்து இந்தியா 38 பதக்கங்களுடன் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை அள்ளியது. ஆஸ்திரேலியா 177 பதக்கங்களுடன் (74 தங்கம், 55 வெள்ளி, 48 வெண்கலம்) முதலிடத்தையும், இங்கிலாந்து 142 பதக்கங்களுடன் (37 தங்கம், 59 வெள்ளி, 46 வெண்கலம்) 3வது இடத்தையும் பிடித்தன.

சர்வதேச போட்டி ஒன்றில் இந்தியா சாதனை படைத்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நிறைவு விழா
காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இங்கிலாந்து இளவரசர் எட்வர்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர் பென்னல் உட்பட பலர் கலந்து கொண்டனர். வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்க உள்ளது. காமன்வெல்த் கொடி அந்த நாட்டு பிரதிநிதியுடன் ஒப்படைக்கப்பட்டு, விழா நிறைவு பெற்றது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காமன்வெல்த் போட்டியில் இந்தியா மகத்தான சாதனை, கலக்கலான நிறைவு விழா"

கருத்துரையிடுக