தப்பிப் பிழைத்தவர்களின் அனுபவங்கள் குறித்த விவரங்கள் வெளிவர காலதாமதமானாலும் கூட சில சுவராஷ்யமான சம்பவங்களைக் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிவியாவின் வாக்குறுதி
சுரங்கத்தில் சிக்கியவர்களில் வெளிநாட்டைச் சார்ந்த ஒரே நபர் பொலிவியாவைச் சார்ந்தவர் ஆவார். இவருடைய பெயர் கார்லோஸ் மமானி. இவரைக் காண்பதற்காக அந்நாட்டு அதிபர் இவோ மொராலிஸ் சான்ஜோஸ் நகருக்கு வருகைத் தந்தார். நாட்டிற்கு திரும்பும் வேளையில் கார்லோஸ் மமானிக்கு இலவசமாக வீடும், வேலையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
சுத்தமான காற்றை சுவாசிப்பதும், நட்சத்திரங்களை காண்பதும் எவ்வளவு அழகானது என்பதை தான் இப்பொழுதுதான் உணர்ந்துக் கொண்டதாக கார்லோஸ் மமானி அதிபர் மொராலிஸிடம் தெரிவித்துள்ளார்.
உணர்ச்சிகரமான சந்திப்பு
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட 36 வயதான க்ளாடியோ யானஸிற்கும் அவருடைய காதலி கிறிஸ்டினா நூனஸிற்குமிடையேயான உணர்ச்சிகரமான சந்திப்புதான் காண வந்தவர்களை கண் கலங்க வைத்தது.
10 வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர். யானஸ் சுரங்கத்திலிருந்து வெளியே வந்தவுடன் முதலில் எங்கள் திருமணம் நடைபெறும் என நூனஸ் தெரிவித்திருந்தார். வருடக்கணக்கில் சிகரெட்டிற்கு அடிமையாகிப்போன யானஸிற்கு சுரங்கத்தில் சிக்கியபொழுது சிகரெட் கிடைக்காமல் பரிதவித்துப் போனார்.
அதிகாரிகள் முதலில் மறுத்த பொழுதும் பின்னர் தினமும் சில சிகரெட்டுகள் சுரங்கத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.
முதலில் வரவேற்பது மனைவியா? காதலியா?
சுரங்கத்தில் சிக்கிய யோன்னி பாரியோஸ் வெளியே வந்தபிறகு முதலில் வரவேற்பது மனைவியா? காதலியா? என்பதை இருவருமே எதிர்பார்த்திருந்தனர்.
முன்னர் இவ்விஷயத்தில் இருவரும் தர்க்கித்துக் கொண்டனர். ஆனால், கடைசியில் விட்டுக்கொடுத்தது மனைவிதான். பாரியோஸ் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டு வெளியே வந்தவுடன் அவருடைய மனைவியான 28 வயது மார்த்தா ஸாலினாஸ் வீட்டில்தான் இருந்தார். கணவர் தன்னை அழைத்த போதிலும் கண்ணியமாக தான் ஒதுங்கிக் கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.
வயது முதிர்ந்த தொழிலாளி
63 வயதான மாரியா கோமஸ், சிலியில் மிகவும் பிரபலமான நபராகிவிட்டார். சுரங்கத்தில் சிக்கியவர்களில் மிகவும் வயதானவர் இவரே. சுரங்கத் தொழிலாளிகளை தாக்கும் சுவாசக் குழாய் நோயான சிலிக்கோசிஸ் பாதித்தவர் இவர். தனியாக தயாராக்கிய ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்துதான் அவர் சுரங்கத்திலிருந்து வெளியே வந்தார்.
கடைசி நபர்
சுரங்கத்திலிருந்து கடைசியாக வெளியே வந்தவர் 54 வயதான லூயிஸ் உர்ஸுவாவை டோன் லூச்சோ என்ற மரியாதையோடு அனைவரும் அழைப்பர்.
சுரங்கத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் மரண பீதிவயப்பட்ட பொழுது அவர்களுக்கு நம்பிக்கையூட்டியவர் இவர்தான்.
இனிப்புகளை தூவியும், சைரன் முழக்கியும், மின்னும் பல்புகளை எரியவிட்டும் வெளியேயிருந்தவர்கள் உர்ஸுவாவை வரவேற்றனர். சிலி அதிபர் பினேரா உர்ஸுவாவை தனியாக பாராட்டினார்.
பிரபலமான நபர்
சுரங்க விபத்திலிருந்து அதிசயத்தக் கவகையில் தப்பிய தொழிலாளிகள் இன்று பிரபலங்களாக மாறிவிட்டார்கள். ஊடகங்கள் அவர்களுடைய அனுபவங்களை வெளியிடுவதற்காக வட்டமிடும் வேளையில் சினிமா தயாரிப்பாளர்களும், கதையாசிரியர்களும் தொழிலாளிகளின் அனுபவங்களை கேட்பதற்கு தயாராகிவிட்டனர்.
மாரியா ஸெபுல்வேதா என்பவர்தான் இவர்களில் மிக பிரபலமான நபர். சுரங்கத்தில் சிக்கிய இவர் ஒவ்வொரு கட்டங்களையும் வீடியோவில் பதிவுச் செய்துள்ளார்.
கோண்ஸாலஸ்
சுரங்கத்தில் சிக்கித்தவித்த தொழிலாளர்களை மீட்டவர்களில் அனைவரையும் கவர்ந்தவர் மானுவேல் கோண்ஸாலஸ் என்பவராவர். கடைசியாக சுரங்கத்திலிருந்து வெளியேறியவர் இவரே. மீட்புப் பணியில் துவக்கம் முதல் இறுதிவரை தலைமை வகித்த இவர் தொழிலாளர்களுக்கு கடைசிக்கட்ட கட்டளைகளை அளிப்பதற்காக சுரங்கத்திற்குள் சென்றார். அனைவரும் வெளியேறிய பின்னர் 26 நிமிடங்கள் அதிகமாக சுரங்கத்தில் இருந்த பிறகே வெளியே வந்தார் இவர்.
33 சுரங்க தொழிலாளர்களின் கல்லறையாக மாறும் என்று கருதப்பட்ட சுரங்க அறையிலிருந்து கோண்ஸாலஸ் வெளியேறிய பொழுது சிலியின் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது.
புதிய குழந்தை
ஏரியல் டிகோணா சுரங்கத்தில் சிக்கிய வேளையில்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்த பிரசவத்தை அவர் வீடியோ வாயிலாக கண்டார்.
நம்பிக்கை என்ற பொருள்படும் எஸ்பரான்ஸா என்ற பெயரை தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார் அவர்.
சிலி அதிபர்
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் மற்றொரு ஹீரோ சிலி அதிபர் ஸெபாஸ்டியன் பினேரா ஆவார். சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கி உயிருக்கு போராடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நிமிடம் முதல் அவர்களை உயிருடன் மீட்பதற்கான மனிதர்களால் முடிந்த அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
தான் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக பேணிய பினேரா சிலி மக்களின் ஹீரோவாக மாறிவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிலிர்க்க வைக்கும் சிலி நிகழ்வுகள் சிந்திக்கவும் வைக்கின்றன"
கருத்துரையிடுக