6 நவ., 2010

பீதியை ஏற்படுத்தும் சர்வே!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முஸ்லிம் வீடுகளை குறிவைத்து அமெரிக்க நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட சர்வேக் குறித்து ஆட்சியாளர்களுக்கு தெரியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஒரு மாநில தலைநகரில் பட்டப்பகலில் பகிரங்கமாக சர்ச்சைக்குரிய சந்தேகங்களை ஏற்படுத்தும் விதமான வினாக்களை உள்ளடக்கிய சர்வே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து வீடுகள் தோறும் ஏறி இறங்கி நடத்தப்படும் பொழுது, இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறுவதை எவ்வாறு நம்ப இயலும்?

மத்திய உளவுத்துறை தலைவருக்கு இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சரின் கூற்று தலை தப்புவதற்கான முயற்சியேயன்றி வேறில்லை.

இச்சம்பவத்தைக் குறித்து ஆழமான விசாரணை நடத்தவோ அல்லது தொடர்புடைய சமூகத்தின் பீதியை ஒழிக்கவோ இவர்கள் தயாரில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.

பல்வேறு காரணங்களால் வேட்டையாடப்படும் ஒரு சமூகத்தை இந்தியா போன்ற பன்முக சமூகச்சூழலில் நிம்மதியாக வாழவிடக் கூடாது என்ற துர்க்குணம் இத்தகைய முயற்சிகளின் பின்னணியில் அமைந்துள்ளதா? என்பதுக் குறித்து விரிவான விசாரணை தேவைப்படுகிறது.

சமீபகாலங்களில் இந்தியாவை உலுக்கிய, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இஸ்ரேல்-அமெரிக்க ஆதரவு சக்திகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில்தான் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமான நாடுகளின் இறையாண்மைக்கு சவால்விடும் விதமாக அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு வெளிப்படையாக அமெரிக்கா நடத்திவரும் அத்துமீறல்களின் உதாரணம்தான் பாகிஸ்தானில் நடந்துவரும் தொடர் குண்டுவெடிப்புகள்.

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் இனரீதியான மோதல்களை உருவாக்கிவிட்ட பிறகு தீவிரவாதிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அமெரிக்கா அந்த நாடுகளில் நுழைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

இந்தியாவைப் பொறுத்தவரை இது வேலைக்காகாது என்பதை உணர்ந்துக் கொண்டு மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி செப்டம்பர் 11-ஐத் தொடர்ந்து உருவான முஸ்லிம் விரோத மனப்பாண்மையை முதலீடாகக் கொண்டு இந்தியாவை கலவர பூமியாக்க அமெரிக்கா திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

ஆட்சியாளர்கள் இதற்கு தீர்வு காண்பார்கள் என நம்புவதற்கில்லை. போபால் விஷவாயு துயரச் சம்பவத்திற்கு காரணமான அமெரிக்க குடிமகன் வாரன் ஆண்டர்சனை பாதுகாப்பாக விமானத்தில் அனுப்பி வைத்த பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள்தானே தற்போதைய ஆட்சியாளர்கள்!

மும்பை தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியை அமெரிக்காவிலிருந்து கைதுச் செய்து அழைத்து வருவதற்கு பதிலாக அவரைச் சென்று சந்தித்து சல்யூட் அடித்து திரும்பியதுதானே இவர்களது மற்றொரு அனுபவம்.

பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதுதான் இப்பிரச்சனையை தீர்ப்பதற்குரிய ஒரே வழியாகும். அதற்கு வலுவான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியாக வேண்டும்!

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பீதியை ஏற்படுத்தும் சர்வே!"

கருத்துரையிடுக