6 நவ., 2010

ஒபாமா வருகையின்போது காந்தியின் நினைவிடத்தில் நாயை அனுமதிக்கக் கூடாது - துஷார் காந்தி

புதுடெல்லி,நவ.6:2006 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பரிசோதனைக்காக நாயை பயன்படுத்தியதுபோல தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையின்போது நாயை பரிசோதனைக்காக அனுமதிக்கக்கூடாது என காந்தியின் பேரனான துஷார் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் துஷார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: "2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த தவறை மீண்டும் இந்திய அரசும், அமெரிக்க பாதுகாப்பு ஏஜன்சிகளும் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். ஒபாமாவின் வருகையை முன்னிட்டு மும்பையில் காந்தி அருங்காட்சியகத்தை இரண்டு தினங்கள் பூட்டியிட தீர்மானித்ததும் சரியல்ல.

கடந்த முறை புஷ் ராஜ்காட்டில் காந்தியின் நினைவிடத்திற்கு வருகைதந்த வேளையில் பாதுகாப்பு பரிசோதனைக்காக நாயை காந்தியின் சமாதி அமைந்துள்ள இடத்தில் கொண்டுச்சென்றனர். இது நாடுமுழுவதும் கண்டனத்தை எழுப்பியிருந்தது. பாராளுமன்றத்திலும் இது சர்ச்சையை கிளப்பியது.

ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு என இதனைக் கருதினால், அமெரிக்காவிற்கு இந்திய குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ அமெரிக்கா செல்லும் வேளைகளில் பாதுகாப்பு பரிசோதனைக்காக நாயை லிங்கனின் நினைவிடத்திலோ, வாஷிங்டனின் நினைவிடத்திலோ செல்ல அனுமதிப்பார்களா? நட்பு நாட்டிற்கான உறவில் கண்ணியம் வேண்டும்." இவ்வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் தெரியுமெனவும், இம்முறை அத்தகையதொரு நிகழ்வு நடக்காது எனவும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் யு.கெ.சவுதரி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒபாமா வருகையின்போது காந்தியின் நினைவிடத்தில் நாயை அனுமதிக்கக் கூடாது - துஷார் காந்தி"

கருத்துரையிடுக