20 டிச., 2010

யுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடைக்க 6 மாத விலக்கு இனி இல்லை

அபுதாபி,டிச.20:ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை ஒப்பந்தம் காலாவதியான ஒருவருக்கு புதிய வேலை அனுமதி கிடைக்க ஆறுமாத விலக்கு (Ban) நிபந்தனை இனி இல்லை என யு.ஏ.இ தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் அறிவித்துள்ளார்.

இச்சட்டம் வருகிற 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய சட்டத்தில் தொழில் மாற்றம்(Transfer), ஸ்பான்சர்ஷிஃப் மாற்றம் ஆகியவற்றிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முடிவு யு.ஏ.இ கேபினட் கூட்ட தீர்மானத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.

வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு வேறொரு வேலையில் சேருவதற்கு முன்னாள் உரிமையாளரிடம் (Employer) அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ஸ்பான்ஷருடனான வேலை ஒப்பந்தம் முடிந்தபிறகு புதிய விசா கோரி மனு சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மேலும் ஒருவர் தனது பழைய தொழில் உரிமையாளரின் கீழ் குறைந்தது இரண்டு வருடமாவது வேலைப்பார்த்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் போடப்பட்டுள்ளது. அதாவது, வருகிற ஜனவரி மாதம் முதல் யு.ஏ.இயில் விசாவின் காலாவதி இரண்டு ஆண்டுகளாகும். அவ்வாறெனில் ஒருவர் தனது பழைய தொழில் உரிமையாளரின் கீழ் இரண்டு வருடங்கள் வேலைபார்த்தால் போதும்.

தொழில் உரிமையாளர் மற்றும் தொழிலாளியின்(Employee) சம்மதம் இல்லாமல் ஒப்பந்தத்தை(Contract) ரத்துச்செய்தல்(Cancel), புதிய விசாவுக்கான மனுவை அளித்தல் ஆகியவற்றுக்கு இயலக்கூடிய இரண்டு சூழல்களையும்(Cases) யு.ஏ.இ தொழில் அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

சட்டரீதியான அல்லது ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை தொழில் உரிமையாளர் மீறுவது முதல் சூழலாகும். இரண்டாவது, தொழிலாளிக்கு தொடர்பில்லாத காரணத்தால் அவரை தொழிலிருந்து நீக்கினால் (அதாவது நிறுவனத்தை மூடிவிட்டால்), தொழிலாளி நிறுவனத்தின் மீது புகார் அளித்தால் உருவாகும் சூழலாகும். இத்தகைய சூழல்களில் அந்த நிறுவனம் இரண்டு மாதத்திற்கு மேலாக செயல்படவில்லை என்பதற்கு விசாரணை அறிக்கை தேவை. மேலும் தொழிலாளி தொழில் அமைச்சகத்தில் புகார் அளித்திருக்க வேண்டும்.

புகாரை அமைச்சகம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும். இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தையோ அல்லது அதில் ஏதேனும் உரிமைகளையோ ரத்துச் செய்திருந்தால் தொழிலாளிக்கு இரண்டுமாத சம்பளமும் இதர சலுகைகளும்(other rights) இழப்பீடும்(Compensation) அளிக்க நீதிமன்றம் தொழில் உரிமையாளருக்கு இறுதி தீர்ப்பு வழங்கும்.

குறைந்தது இரண்டு வருடங்கள் தொழில் உரிமையாளரின் கீழ் வேலைச் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தொழிலாளி நிறைவேற்றாவிட்டாலும் கூட புதிய தொழிலில் அனுமதி(Permit) கிடைப்பதற்கான மூன்று சூழ்நிலைகளை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அவை:
1.வேலையில் சேரும்பொழுது தொழிலாளி தொழில்முறை வகுப்பில்(Professional Class) ஒன்று, இரண்டு, மூன்று(First, Second and Third) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் உட்படுவார்.

புதியதாக சேரப்போகும் தொழிலில் வாக்குறுதியளிக்கப்படும் சம்பளம் ஒவ்வொரு பிரிவுக்கும் முறையே 12 ஆயிரம் திர்ஹம், 7 ஆயிரம் திர்ஹம், 5 ஆயிரம் திர்ஹம் ஆகியவற்றிலிருந்து குறைந்துவிடக் கூடாது.

2.தொழிலின் உரிமையாளர் சட்டரீதியான அல்லது தொழில் ரீதியிலான நிபந்தனைகளை கடைபிடிக்காமலிருந்தால் அல்லது தொழிலாளியை காரணமில்லாமல் வேலையிலிருந்து நீக்கினால்.

3.தொழில் உரிமையாளரின் இதர நிறுவனங்களிலோ அல்லது அவர் பங்குதாரராக இருக்கும் வேறு நிறுவனங்களிலோ தொழிலாளியை மாற்றுவது

இந்த மூன்று சூழ்நிலைகளில் தொழிலாளிக்கு நிச்சயிக்கப்பட்ட கால அவகாசம் பூர்த்தியாகமலேயே புதிய விசா கிடைக்கும்.

தொழில் சந்தையை(Labour market) மேலும் நெகிழ்வுத் தன்மையுடையதாக(Flexible) மாற்றுவதுதான் சட்டதிருத்தத்தின் மூலம் நோக்கமாக கொள்ளப்பட்டது என ஸகர் கோபாஷ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் தொழில் உரிமையாளருக்குமிடையேயான ஒப்பந்தத்தில் சமத்துவம் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இரு தரப்பினருடைய சட்டரீதியான உரிமைகளை பேணி பாதுகாப்பதற்கு உரிய பொறுப்பு தொழில் அமைச்சகத்திற்காகும்.

சட்டரீதியான நிபந்தனைகளில் முறைகேடுகள் நடந்தால் மட்டுமே தொழில் அமைச்சகம் தொழிலாளி மற்றும் தொழில் உரிமையாளருக்கிடையேயான ஒப்பந்தத்தில் தலையிடும்.

தொழில் சந்தையில் நிலவும் ஏராளமான முறைகேடுகளுக்கு இந்த புதிய சட்டம் பரிகாரமாக மாறும். வல்லுநர்களுடனான கலந்தாய்வுக்கு பின்னரே தற்போதைய சட்டங்களின் தொடர்ச்சியாக புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசத்தின் முன்னேற்றத்திற்கு இவை உதவிகரமாக இருக்கும் என தொழில் அமைச்சர் ஸகர் கோபாஷ் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "யுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடைக்க 6 மாத விலக்கு இனி இல்லை"

கருத்துரையிடுக