21 டிச., 2010

வட கொரியா எச்சரிக்கையை மீறி தென் கொரியா போர் விமானப் பயிற்சி

சியோல்,டிச.21:வட கொரியாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தென் கொரியா திங்கள்கிழமை (டிச.20) ராணுவப் பயிற்சியை மேற்கொண்டது. வட கொரியாவை ஒட்டிய தீவுப் பகுதியில் தென் கொரியப் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டன.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ராணுவப் பயிற்சி மதியம் 2.30 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்தது. இப்பயிற்சி நிறைவடைந்ததும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின் பேட்டி அளித்தார். அப்போது, எங்களது நாட்டு முப்படைகளும் வட கொரியா விடுக்கும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றார்.

இதைத்தொடர்ந்து பேட்டியளித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். போர் விமானங்களும் ஆயத்த நிலையில் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே பிரச்னைக்குரிய பகுதியில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றார்.

ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சிறிது நேரத்தில் அந்நாட்டு முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் இப்படி பேட்டியளித்ததால் அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளது.

தென் கொரியா போருக்கு தயாராகிவிட்டதாகவே வட கொரியா நினைக்கின்றது. இதனால் அந்நாடும் தமது ராணுவத்தை ஆயத்த நிலையில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட கொரியா கடந்த நவம்பர் 23-ம் தேதி தென் கொரியாவின் யோங்பியோங் தீவின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தென் கொரியா கோபம் அடைந்தது. இருப்பினும் எவ்வித பதில் தாக்குதலையும் நடத்தவில்லை.

எனினும் தென் கொரியா பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அப்போது இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளையும் அமைதி காக்குமாறு சீனா, ஜப்பான், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து போர் பதற்றம் தணிந்தது.

இந்நிலையில் வட கொரியாவை மிரட்டும் வகையில் தென் கொரியா போர் விமானப் பயிற்சியில் ஈடுபட்டது மீண்டும் அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா.கூட்டம் தோல்வி: இதனிடையே, கொரியப் பிரச்னை குறித்து ஆலோசிக்கக் கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் தோல்வியைத் தழுவியது.

இந்தக் கூட்டத்தில், வட கொரியா முன்பு நடத்திய தாக்குதலுக்கு ரஷியாவும், சீனாவும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் வலியுறுத்தின. இதை ரஷியாவும், சீனாவும் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள சூழலில் ஐ.நா. அவசரக் கூட்டம் தோல்வியைத் தழுவியுள்ளதால் இரு நாட்டு மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

வட கொரியா ஏற்பு: தங்களது நாட்டு அணுசக்தி வளாகத்தை ஐ.நா. அணுசக்தி முகமை ஆய்வு செய்ய இப்போது வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்களது நாட்டுக்குள் ஐ.நா. அணுசக்தி முகமையை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்து வந்த வட கொரியா, இப்போது தமது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வட கொரியா எச்சரிக்கையை மீறி தென் கொரியா போர் விமானப் பயிற்சி"

கருத்துரையிடுக