9 டிச., 2010

விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் நடத்தும் பழிவாங்கும் ஹேக்கிங் போர்

ஸ்டாக்ஹோம்,டிச.9:விக்கிலீக்ஸிடம் எதிரிகளாக நடந்துக் கொள்வோர் மீது அந்த இணையதளத்தின் ஆதரவாளர்கள் ஹேக்கிங் போரை துவக்கியுள்ளனர்.

விக்கிலீக்ஸிற்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் இணையதளங்களை குறிவைத்து நிரந்தரமாக தாக்குதல் நடத்திக்கொண்டு புதுவிதமான போரைத் துவக்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஸ்வீடன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவர்கள் ஹேக்கிங் மூலம் முடக்கிவிட்டனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து ரிகெரின்ஜென் regeringen.se என்ற சுவீடன் அரசின் இணையதளம் பல மணிநேரம் செயல்படாமல் முடங்கியது.

பாலியல் குற்றஞ்சாட்டி சுவீடன் அரசு விக்கிலீக்ஸின் ஸ்தாபகரான ஜூலியன் அஸென்ஜேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் போலீசாரால் கைதுச் செய்யப்பட்ட ஜூலியன் அஸென்ஜே போலீஸ் காவலில் உள்ளார்.

க்ரெடிட் கார்ட் நிறுவனங்களான விசா, மாஸ்டர் ஆகியவற்றின் இணையதளங்களும் தாக்குதலுக்குள்ளாயின. அமெரிக்க அரசு அளித்த நிர்பந்தத்தினால் விசாவும், மாஸ்டரும் விக்கிலீக்ஸின் நிதி வருகைக்கு தடைவிதித்திருந்தது. விக்கிலீக்ஸிற்கு வந்த நிதியுதவியை தடுத்த பே பாலின் மீதும் ஹேக்கர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விக்கிலீக்ஸின் எதிரிகளின் மீதான தங்களின் பிரச்சாரம் தொடரும் என கோல்ட்ப்ளட் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் ஹேக்கிங் குழு அறிவித்துள்ளது. இணையதளங்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏராளமான வாலண்டியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போட்நெட் என்ற குறிப்பிட சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்து ஏராளமான கம்ப்யூட்டர்கள் ஒருங்கிணைந்து இணையதளங்களுக்கெதிரான டிடோஸ் தாக்குதலை நடத்திவருகின்றன.

இதற்கிடையே அமேசான் இணையதளத்தை முடக்கப் போவதாக ஹேக்கர் ஒருவர் தனது ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸின் நிதி ஆதாரங்களின் வருகைக்கு தடைவிதித்த விசா, மாஸ்டர் க்ரெடிட் கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகப்போவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளையில், சுவீடனின் மைக்ரோபேமண்ட் நிறுவனம் ஃப்ளாட்டர் விக்கிலீக்ஸிற்கு அளிக்கப்படும் நிதியுதவிகளை ஏற்றுக்கொள்வது தொடரும் என அறிவித்துள்ளது.

நீதிமன்றம் சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கும்வரை விக்கிலீக்ஸிற்கு நிதியளிப்பதை தடுக்கமாட்டோம் என ஃப்ளாட்டரின் சேர்மன் லினஸ் ஆல்ஸன் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் நடத்தும் பழிவாங்கும் ஹேக்கிங் போர்"

கருத்துரையிடுக