11 டிச., 2010

அலகாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான விமர்சனங்களை நீக்கமுடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி,டிச.11:அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் என்னவோ நாற்றமடிக்கிறது என ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் நாடகத்தில் இடம்பெற்ற 'சம்திங் வாஸ் ராட்டன்' என்ற வார்த்தையைக் கூறி, அலகாபாத் நீதிபதிகள் ஊழல்வாதிகளும், பாரபட்சமாக நடப்பவர்களுமாவர் எனக் கருத்துத் தெரிவித்த உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்தை வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு ஆத்ம பரிசோதனை நடத்தவேண்டும் என நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்தது.

நீதிபதிகளின் விமர்சனத்தை வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தி அலகாபாத் உயர்நீதிமன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடிச் செய்த நீதிபதிகள் தங்கள் கருத்தை வாபஸ் பெற மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் நேர்மையான சில நீதிபதிகளும் இருக்கின்றார்கள் என விளக்கம் அளித்தனர்.

ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் நீதிபதிகளின் இவ்விளக்கம் திருப்தியளிக்கவில்லை என திரும்ப திரும்ப கூறினார். உடனே நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோபத்துடன், "இது போன்று இங்கு பேசாதீர்கள். அலகாபாத் உயர்நீதிமன்றத்துடன் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் 100 ஆண்டுகால தொடர்பு உள்ளது. யார் நேர்மையானவர்? யார் ஊழல்வாதி என்பதை மக்கள் அறிவார்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் பி.பி.ராவ், "அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுவிட்டது. சாதாரண கிராமப்புற மக்களுக்கு நீதிபதிகளில் யார் நேர்மையானவர்கள்?, யார் ஊழல்வாதிகள் என்று வித்தியாசம் காணமுடியாது." என குறிப்பிட்டார்.

இதனால் ஆவேசமடைந்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, "கிராமப்புற மக்களைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள்? அவர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். இந்திய மக்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டீர்களா? நாளையே இந்த மார்க்கண்டேய கட்ஜு லஞ்சம் வாங்கத் துவங்கிவிட்டால், இந்த நாட்டுக்கே அது தெரிந்துவிடும். எனவே இதுபோல் பேசவேண்டாம்" என எச்சரித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அலகாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான விமர்சனங்களை நீக்கமுடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி"

கருத்துரையிடுக