7 டிச., 2010

கர்காரே கொலை:அதிகாரிகளை திணறடிக்கும் உயர்நீதிமன்றத்தின் கேள்விகள்

மும்பை,டிச.7:மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே கொலை வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் மஹாராஷ்ட்ரா அரசையும், போலீஸ்-ரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளை திணறடித்துள்ளது.

கர்காரேயின் கொலையை இண்டலிஜன்ஸ் பீரோவும்(ஐ.பி) ஹிந்துத்துவா அமைப்புகளும் இணைந்து நிறைவேற்றியதாக கூறி பீகார் முன்னாள் எம்.எல்.ஏ ராதாகாந்த் யாதவும், சமூக ஆர்வலர் ஜோதி படேக்கரும் அளித்த மனுக்களை பரிசீலிக்கும் பொழுது மும்பை உயர்நீதிமன்றம் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் தடுமாறவைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கர்காரே கொலைத் தொடர்பாக மஹாராஷ்ட்ரா முன்னாள் போலீஸ் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற புத்தகத்தில் எழுப்பிய கேள்விகளைக் குறித்து பதில் அளிக்கவேண்டுமென நீதிபதிகளான பி.ஹெச்.மார்லாபள்ளெ, யு.டி.ஸால்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மும்பையை தாக்க பாகிஸ்தானிலிருந்து ஒரு குழுவினர் வருவது குறித்து ஐ.பிக்கு முன்னரே தகவல் கிடைத்தும் கூட அதனை அரசுக்கோ, மேற்கு கடற்படையினருக்கோ ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?

தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சதித்திட்டத்தைக் குறித்து ஏன் விரிவாக விசாரிக்கவில்லை?

கர்காரேயை கொன்றவர்கள் மராத்தி மொழியில் பேசியதாக கூறும் உண்மையை மறைத்தது ஏன்?

கர்காரே கொல்லப்படும் வரையிலான தாக்குதல் நடத்தியவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஏன் கண்காணிப்பிற்கு உள்ளாக்கவில்லை?

ஆகியன உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளில் முக்கியமானவையாகும். இக்கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பாலிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாக்குதல் தொடர்பாக க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரும், அரசால் நியமிக்கப்பட்ட பிரதான் கமிட்டியும் நடத்திய விசாரணையை விமர்சித்த நீதிமன்றம், உண்மையை கண்டறிவதில் இவை இரண்டும் தோல்வியை சந்தித்ததாக கூறியது.

தாக்குதல் நடந்தபொழுது இண்டலிஜன்ஸ் அறிக்கையை பிரதான் கமிட்டி கேட்டபொழுதும் அளிக்காதது ஏன்?

அத்தகையதொரு கமிட்டி அறிக்கையால் என்ன பயன்? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கர்காரேயை கொன்ற கும்பலில் ஒருவர் மராத்தி மொழி பேசியதை கேட்டதாக மஹாராஷ்ட்ரா சுற்றுலாத்துறை மேம்பாட்டு ஆணைய தலைவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பூஷன் கக்ரானி கூறியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தீவிரவாதி மராத்தி மொழியில் பேசினார் என்றால் அவர் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்பது உறுதியாகும்.

தாஜ், ஓபராய் ஹோட்டல்களிலும், நரிமான் ஹவுஸிலும் இருந்த தீவிரவாதிகள் நடத்தி தொலைபேசி உரையாடல்கள் தீவிரவாத எதிர்ப்பு படை பதிவுச்செய்ய துவங்கியது கர்காரே கொல்லப்பட்ட பிறகாகும். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என நீதிபதி பி.ஹெச்.மார்லாபள்ளெ கேள்வியெழுப்பினார்.

சி.எஸ்.டி ரெயில்வே ஸ்டேசனில் முக்கிய ப்ளாட்ஃபாமில் பொருத்தப்பட்டுள்ள 16 சி.சி. டி.வி கேமராக்கள் தாக்குதல் நடக்கும்பொழுது செயல்படவில்லை எனக் கூறும் போலீசாரின் வாதத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.

தாக்குதல் நடப்பதற்கு முன்பு அதனை பழுதாக்கியது யார்? என்றும் மார்லாபள்ளெ கேள்வி எழுப்பினார்.

தாக்குதல் தொடர்பாக 35 சிம் கார்டுகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய காபினெட் செயலாளர் வழியாக ஐ.பி துணை இயக்குநர் பிரபாகர் அலோக்கிடம் ஒப்படைத்த பிறகும் இவ்விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆனால், ஐ.பிக்கு தினந்தோறும் கிடைக்கும் தகவல்கள் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை எனவும், எனவே அதனை முக்கியமாக கருதவேண்டாம் என்பதும் அரசுதரப்பு வழக்கறிஞரின் பதிலாகும்.

முஷ்ரிஃபின் நூலில் எழுப்பட்ட சந்தேகங்கள் முக்கியமானதாகும் என கருத்துத் தெரிவித்த நீதிமன்றம் அவற்றை எழுப்ப ஒரு குடிமகன் என்ற நிலையில் அவருக்கு உரிமையுண்டு எனக் கூறியது.

விசாரணை நடைபெறும் வேளையில் முஷ்ரிஃபும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை அரசால் அளிக்கமுடியாது எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்காரே கொலை:அதிகாரிகளை திணறடிக்கும் உயர்நீதிமன்றத்தின் கேள்விகள்"

கருத்துரையிடுக