31 ஜன., 2011

எகிப்து:உமர் சுலைமான் அமெரிக்காவின் உறவினர்

கெய்ரோ,ஜன.31:மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கால் நியமிக்கப்பட்ட துணை அதிபர் உமர் சுலைமான் அமெரிக்காவிற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

தனது 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் முதன்முறையாக முபாரக் தனக்கு ஒரு உதவியாளரை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்து நாட்டின் வெளிநாட்டு உளவு பிரிவின் தலைவரும், மேற்காசிய சமாதான பேச்சுவார்த்தையில் எகிப்து நாட்டின் தூதராக பணியாற்றிய சுலைமான் முபாரக்கின் நம்பிக்கைக்குரிய தோழராவார்.

முபாரக் பதவி விலகுவதன் அறிகுறியாக உமர் சுலைமானின் நியமனம் கருதப்படுகிறது. மக்களின் விருப்பங்களை விட அரசு மற்றும் ராணுவத்தின் விருப்பத்தின் அடிப்படையில்தான் உமர் சுலைமன் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் சட்டத்தின் படி செல்லத்தக்க வகையில் ராணுவத்தின் தலைமையிலான ஆட்சியை தொடர்வதன் திட்டம்தான் இது என மின்னஸோட்டா பல்கலைக்கழக பேராசிரியர் ராக்வி ஆஸாத் கூறுகிறார். ராணுவத்துடனான சமரசத்தின் ஒரு பகுதி இது என அவர் தெரிவிக்கிறார்.

உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்தது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. முபாரக்குடன் சுலைமானையும் எதிர்த்து முழக்கமிடுகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டு மக்கள்.

ஈரானுடனான பகை, அமெரிக்க உறவு, இஸ்ரேலுடனான நல்லிணக்கம், இஃவானுல் முஸ்லிமீனுக்கு கடுமையான எதிர்ப்பு ஆகியவற்றில் முபாரக்கிற்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமான சிந்தனையைக் கொண்டவர் 74 வயதான உமர்சுலைமான்.

ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பாக ஆட்சியை விட்டு வெளியேறி உமர்சுலைமானை அதிபராக நியமிப்பதுதான் ஹுஸ்னி முபாரக்கின் திட்டம் எனக் கருதப்படுகிறது. இதற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதமும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுலைமானை துணை அதிபராக நியமித்த அதேநாளில்தான் முன்னாள் விமானப்படை தலைவரான அஹ்மத் ஷஃபீக்கை பிரதமராக ஹுஸ்னி முபாரக் நியமித்தார். இது ராணுவத்திற்கு கட்டுப்பாட்டை வழங்குவதன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

கெய்ரோவிலுள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில், உமர் சுலைமான் அமெரிக்காவின் உறவின் என சிறப்பித்துக் கூறிய தகவலை சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இடம் பெற்றிருந்தது.

லெபனான், ஈராக், இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனை ஆகியவற்றில் எகிப்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் என சுலைமான் கூறியதாக விக்கிலீக்ஸின் ஆவணம் தெரிவிக்கிறது.

தனது மகன் ஜமால் முபாரக்கை அடுத்த அதிபராக நியமிக்க ஹுஸ்னி முபாரக் திட்டமிட்டிருந்த போதிலும் உமர் சுலைமானுக்குத்தான் அமெரிக்காவின் பட்டியலில் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:உமர் சுலைமான் அமெரிக்காவின் உறவினர்"

கருத்துரையிடுக