9 ஜன., 2011

மேற்கு வங்காளத்தில் கூட்டுப் படுகொலை - எதிர்ப்பு வலுக்கிறது

ஜர்கிராம்,ஜன.9:எட்டுபேர் படுகொலைச் செய்யப்பட்டு 18 பேருக்கு காயம் ஏற்படக் காரணமான சம்பவத்தில் மேற்குவங்காளத்தில் எதிர்ப்பு வலுக்கிறது.

இந்த வன்முறைச் சம்பவத்தை ஆளுநர் எம்.கே.நாராயணன் கண்டித்துள்ளார். இத்தகைய வன்முறையை எந்த முன்னேறிய சமூகம் அங்கீகரிக்காது. லால்கரின் நிலைமைகளைக் குறித்து முதல்வருடன் பேசுவேன் என அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை சுமந்தவாறு நடந்த மெளன ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டார். இச்சம்பவத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கூட்டுப் படுகொலை நடந்துள்ள சூழலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்துச் செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்கு வருமாறு முதல்வர் புத்ததேவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், உடனடியாக புத்ததேவ் டெல்லி செல்ல முடியாது என அவருடைய அலுவலகம் அறிவித்துள்ளது. ப.சிதம்பரத்தின் கடிதம் கிடைத்ததை அலுவலகம் ஒப்புக்கொண்டது.

அதேவேளையில், இச்சம்பவத்தைக் குறித்து முன்னர் தெரிவித்த கருத்தை மேற்குவங்காள உள்துறை செயலாளர் ஞான் தத்த கவுதமா மாற்றினார். துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளின் பங்கினை ஒதுக்கிவிட முடியாது என நேற்று அவர் தெரிவித்தார்.

சி.பி.எம்மும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குமிடையேயான மோதல்தான் கொலையில் முடிந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை கவுதமா தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதா? என்பதுக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கவுதமா தெரிவித்தார்.

லால்கரில் நேடய் கிராமத்தில் பாதுகாப்பு படை ரோந்துச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சி.பி.எம் தொண்டர்கள் என கருதப்படும் சிலர் கிராமவாசிகள் மீது துப்பாக்கியால் சுட்டதில்தான் எட்டுபேர் படுகொலைச் செய்யப்பட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்கு வங்காளத்தில் கூட்டுப் படுகொலை - எதிர்ப்பு வலுக்கிறது"

கருத்துரையிடுக