13 ஜன., 2011

தலைப்பற்றது...

26.12.2010 இறைவன் குறித்த நாள் போலும்,
அறிந்தே யிருக்கமாட்டார்கள் மரணத்தை சுவைப்போமென்று,

ஆழிப்பேரலை ஏற்படுத்திய அதே தினத்தில்,
கடல் அன்னை காவு கொண்டாள்...
எங்களின் பதினைந்து விலைமதிக்க முடியா உயிர்களை!!!

மாபெரும் மரண போராட்டம் அது!

இதோ! மரண படுகுழி வந்துவிட்டது என்று -
படகு அவர்களை கவிழ்த்திய போது ...
கலங்கிப்போயிருப்பார்கள்...
எங்களால் அதை உணர முடிகிறது...
உதவிக்கு சென்றவர்கள் - உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
உயிருக்கான போராட்ட வரலாறை
பின்புதான் எங்களால் தொகுக்க முடிந்தது...

ஆறு மாத குழந்தை முதல்
அறுபது வயது குமரிகள் நிறைந்த
கடல் போர் அது...

எமது கன்னிகள் அதில் வீரமுடன் போராடியிருக்கிறார்கள்...
பிழைத்தவர்கள் அதற்கு சாட்சி...
கணவனோடு சென்ற மனைவிகளை கணவன் காப்பாற்றியதும்,
குழந்தைகளுக்காக குமரிகளும் குடும்பத்தவர்களும்...
கடலிலே களமாடியதும்...
வார்த்தைகள் விம்மி அழுகின்றன...
ஆனாலும் அந்த வீர வரலாற்றை வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை...

சுயநலம் சில உயிர்களை படுகொலை செய்திருக்கிறது...
மன்னிக்கவே முடியாதது அது...

உயிர் பிழைத்தவர்கள்...
தங்களுக்காக உயிரை பிச்சையாகயிட்டவர்களை மறக்க முடியாது...
மரணம் வரை அதன் ஞாபக அலைகள் வீசிக்கொண்டேயிருக்கும்...

எமது கன்னிகள் போராடியிருக்கிறார்கள்...
ஒன்று ... இரண்டு... மூன்று... என்று உயிர்களுக்கு மறு
வாழ்க்கைக் கொடுத்துவிட்டு...
தாங்கள் பிழைக்க எத்தனித்த பொழுது...
கடல் காமுகன் எங்கள் கன்னிகளின் ஆடைகளை
பறித்து கொண்டது பரிதாபம்...

படகிலிருந்தவர்கள் கை நீட்டி அழைத்த போது...
எமது கன்னிகள்!
கீழாடைகள் அறுபட்டதை அறிந்து...
மரணத்தை விட மானம் பெரிதென்று மாண்டு போனார்கள் - எங்களது வீராங்கனைகள் சிலர்...

நேரில் பார்த்தவர்கள்... பிரமித்துப் போயிருப்பார்கள்
இன்றும் பிழைத்தவர்கள் மெளனமாய்...
அவர்களின் மெளனம்,
வார்த்தைகள் இல்லாத தியாக வர்ணிப்பு...
எங்களால் அந்த உணர்ச்சிகளை அவர்களை காணும் போது -
மொழிப்பெயர்க்க முடிந்தது...

தண்ணீரில் இறப்பவர்கள் 'ஷஹீதுகள்' தான்...
அதற்கு சான்றுகள் இருக்கின்றன...
எமது சகோதரிகள் அதற்கு சாட்சிகள்...

ஊரே திரண்டிருந்தது...
கை சேதம்!
எங்களால் ஊர்வலமாய் மட்டுமே போகமுடிந்தது...
அவர்களுக்காக!
மரணப்படுகுழிகளை அறைகளாக் அலங்கரித்துக்
கொடுக்க மட்டுமே முடிந்தது...

முடிந்தது... இறைவா! அனைத்தும் முடிந்தது...
கண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம்...
கதறி மன்றாடுகின்றோம்...
அவர்களுக்காக சுவர்க்கத்தை கூலியாக கொடுப்பாயாக...
வக்கற்ற விதிகளோடு...
நான்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "தலைப்பற்றது..."

Mohamed Ismail MZ சொன்னது…

இக்கவிதையை படித்து விட்டு கண்கள் குளமாகி விட்டது.

கருத்துரையிடுக