4 ஜன., 2011

சொந்த நாட்டிலேயே பாதுகாப்பில்லை: விநாயக் சென் மனைவி இலினா

புதுடெல்லி,ஜன.:சொந்த நாட்டிலேயே தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை என்று மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மருத்துவர் விநாயக் சென்னின் மனைவி இலினா சென் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: "என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.

விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர். ஆனால் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட சதிச் செயல்கள். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதன் மூலம் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக்கூடும்.

என்னை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஜனநாயக நாட்டின் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கேட்பதே இப்போது எனக்கு தெரிந்த ஒரே வழியாக உள்ளது. சொந்த நாட்டிலேயே எனக்கு பாதுகாப்பில்லை. எனக்கு 20, 25 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். என் கவலை எல்லாம் அவர்களைப் பற்றிதான் உள்ளது.

எங்கள் குடும்பத்திற்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அதனால் நான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஏஜெண்ட் என்று அவதூறு பிரசாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம் நண்பர்கள் அதிகம் இருந்தால் அதை சட்ட விரோதமாக பார்க்கும் நிலை நாட்டில் நிலவுகிறது. என் கணவருக்கு பிறகு இப்போது நானும் அவதூறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளேன்" என்றார் இலினா சென்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொந்த நாட்டிலேயே பாதுகாப்பில்லை: விநாயக் சென் மனைவி இலினா"

கருத்துரையிடுக