14 பிப்., 2011

உலகக் கோப்பை கிரிக்கெட்: பெற்றோர் மற்றும் தொழிலதிபர்களின் கவலை

புதுடெ௦ல்லி,பிப்.14:உலக கோப்பை 2011 கிரிக்கெட் போட்டியால் உற்பத்தியும் உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறையும் என்று தொழில் அதிபர்களும் வியாபார நிறுவனங்களின் தலைவர்களும் இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.

சுமார் 4 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்திய பிறகு 'அசோசேம்' வெளியிட்டுள்ள முடிவில் இந்தக் கவலை எதிரொலிக்கிறது.

படிப்பும் கோவிந்தா: ஏற்கெனவே பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தேர்வு சமயத்தில் இந்த உலகக் கோப்பை வந்து தொலைக்கிறதே என்ற கவலையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

இந்தப் போட்டியை இந்தியா, வங்கதேசம், இலங்கை சேர்ந்து நடத்துகின்றன. எனவே போட்டிகள் பெரும்பாலும் பகல் நேர போட்டியாகவோ பகல்-இரவு நேர போட்டியாகவோதான் நடைபெறும். எனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் தொழில் நிறுவனங்களிலும் வியாபாரத் தலங்களிலும் கிரிக்கெட் போட்டியைக் காணத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் இந்தியா பங்குபெறும் ஆட்டம் என்றால் ஈர்ப்பு அதிகமாகவே இருக்கும்.

தூக்கக் கலக்கத்தோடு: இதைவிட முக்கியம் வீட்டுக்குச் சென்றாலும் போட்டிகளை இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் பார்த்துவிட்டு தூக்கம் போதாத நிலையிலேயே மீண்டும் அடுத்த நாள் வேலைக்குச் செல்வார்கள்.

இதனால் அவர்களுடைய முழு மனதுடன் வேலை செய்ய முடியாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இதனால் உற்பத்தித்திறன் வெகுவாகக் குறையும்.

திடீர் பண்டிட்டுகள்: வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை ஒரு முறை தொட்டுக்கூட பார்த்திராத கிரிக்கெட் பண்டிதர்கள் பலர் புள்ளி விவரங்களையும் வல்லுநர் கருத்துகளையும் வாரி வழங்கி அடுத்தவர்கள் வேலையையும் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.
எனவே பிப்ரவரி 19 முதல் தொடங்குகிறது கிரிக்கெட் தலைவலி என்று தொழில்துறை, வியாபாரத்துறை தலைவர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.

பொய் சொல்லி விடுப்பு: அரை இறுதி, இறுதி ஆகிய போட்டிகளைப் பார்க்க நேரடியாக விடுப்பு கேட்டால் தர மாட்டார்கள் என்பதால் பொய்க் காரணங்களைக் கூறவும் பலர் மனதளவில் தயாராகி வருகின்றனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

பிப்ரவரி-மார்ச்: பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள் மார்ச் மாதம் முழுக்க நடைபெறும். கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தப் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கப் போகிறார்கள். எனவே உத்தேசமாக 7680 லட்சம் மனித உழைப்பு நேரங்கள் வீணாகும் என்று அசோசேம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
செய்தி:தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகக் கோப்பை கிரிக்கெட்: பெற்றோர் மற்றும் தொழிலதிபர்களின் கவலை"

கருத்துரையிடுக