14 பிப்., 2011

எகிப்து:பாராளுமன்றம் கலைப்பு

கெய்ரோ,பிப்.14:வெகுஜன எழுச்சியைத் தொடர்ந்து சர்வாதிகார ஆட்சி எகிப்தில் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில், அந்நாட்டின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த ராணுவ சுப்ரீம் கவுன்சில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு அரசியல் சட்டத்தை முடக்கியுள்ளது. இன்னும் 6 மாதம் அல்லது அடுத்த தேர்தல் நடைபெறும்வரை ஆட்சியில் ராணுவம் தொடர்வதற்கான வாய்ப்புகள இருக்கிறது.

ஆனால், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எகிப்தில் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ராணுவத்தின் அறிக்கையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியான NDPயைச் சார்ந்தவர்களாவர். பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு அரசியல் சட்டத்தை முடக்கியதன் மூலம் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கோரிக்கைகள் 2 அமுல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த தேர்தலில் முபாரக் அரசு எதிர்கட்சியினரை அடக்கி ஒடுக்கி விட்டு தில்லுமுல்லு நடத்தியதன் காரணமாக பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்றிருந்தது. மக்களின் விருப்பத்திற்கிணங்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என ராணுவ சுப்ரீம் கவுன்சில் தேசிய தொலைக்காட்சி மூலமாக அறிவித்துள்ளது.

ஜனநாயகத்தை நோக்கி அமைதியான முறையில் காலடிகளை எடுத்துவைப்போம் என எகிப்தின் ஆட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ராணுவ சுப்ரீம் கவுன்சில் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், வாக்குறுதி மட்டும் போதாது, பயனளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரி ஏராளமான மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டிருந்ததைத் தொடர்ந்து நேற்று ராணுவத்தினருக்கும், மக்களுக்குமிடையே நேற்று மோதல் ஏற்பட்டது.

கலைந்து செல்ல ராணுவம் கோரிய பொழுதும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டிருந்ததால் தஹ்ரீர் சதுக்கத்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர ராணுவம் முயன்றது. இதனால் பிரச்சனை முற்றியது. சீர்திருத்தம் என்ற தங்களது கோரிக்கையை அங்கீகரிக்காவிட்டால் மேலும் பேரணிகளை நடத்துவோம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முபாரக் அரசில் பதவி வகித்த உயர் அதிகாரிகளும், பிரமுகர்களும் நாட்டைவிட்டு வெளியேற ராணுவம் தடைவிதித்ததைத் தொடர்ந்து முபாரக் அமைச்சரவை உறுப்பினர்களான மூன்றுபேர் மீது விசாரணை துவங்கியுள்ளதாக தேசிய தொலைக்காட்சி கூறுகிறது.

முன்னாள் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனஸ் அல் ஃபெக்கி, முன்னாள் பிரதமர் அஹ்மத் நஸீஃப், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அத்லி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

அதேவேளையில், ஹுஸ்னி முபாரக் ஷரமு ஷேக்கில் ரெட் ஸீ ரிஸார்ட்டில்தான் தங்கியிருப்பதாக பிரதமர் அஹ்மத் ஷஃபீக் கூறுகிறார். முபாரக் யு.ஏ.இயில் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன. முபாரக் யு.ஏ.இக்கு வந்துள்ளதாக வெளியான செய்திகளை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:பாராளுமன்றம் கலைப்பு"

கருத்துரையிடுக