24 பிப்., 2011

பஹ்ரைன்:புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு

மனாமா,பிப்.24:பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக மன்னர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள வளமான பஹ்ரைனில் மன்னருக்கு எதிரான போராட்டத்தைக் குறைக்கும் முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கடந்தாண்டு அக்டோபரில் சட்ட விரோத அமைப்பு ஒன்றை நிறுவி அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து தவறான தகவலை பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 25 ஷியா பிரிவினரும் அடங்குவர்.

தொடர்ந்து "அல் ஹக்" என்ற எதிர்க்கட்சியின் தலைவர்களான ஹசன் முஷைமா மற்றும் ஷியா முஸ்லிம் அறிஞர் முகமது அல் மொக்தாத் இருவருக்கும் மன்னர் மன்னிப்பு அளித்துள்ளார். இவர்களில் முஷைமா தற்போது லண்டனில் உள்ளார். நேற்று முன்தினம் இவர் நாடு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் அவர் இன்னும் லண்டனில் இருந்து பஹ்ரைனுக்கு வரவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

பஹ்ரைனின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி, "பஹ்ரைனில் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு சாதகமானவை" என்று கூறியுள்ளார்.

எனினும் அல் வெபாக் கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் மட்டார் இது பற்றி கூறுகையில், "இது ஒரு நல்ல நடவடிக்கை தான். எனினும் இன்னும் பலர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும். மக்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். முக்கியமாக உண்மையான அரசியல் சீர்திருத்தமான மன்னர் தலைமையிலான அரசியல் சாசன ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன் பின் தான் பேச்சுவார்த்தை சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பஹ்ரைன்:புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு"

கருத்துரையிடுக