1 மார்., 2011

தமிழகம் கேரளா உள்ளிட்ட சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் - தமிழகத்தில் மே-13ல் தான் 'ரிசல்ட்'!

டெல்லி,மார்ச்.1:தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:
இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

4.59 கோடி வாக்காளர்கள்:
தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.

தமிழகத்தில் 99.98-சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தமிழகம் கேரளா உள்ளிட்ட சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் - தமிழகத்தில் மே-13ல் தான் 'ரிசல்ட்'!"

கருத்துரையிடுக