5 மார்., 2011

சிறுபான்மை,ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நண்பர் அர்ஜுன் சிங் மரணம்

டெல்லி.மார்ச்.5:காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜூன் சிங் நேற்று காலமானார்.

நெஞ்சு வலி மற்றும் நரம்பு பிரச்சனை தொடர்பாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நேரு குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாகயிருந்த அர்ஜூன் சிங் பல நேரங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியையும் ஏற்படுத்தி வந்தவர். நேரு குடும்பத்துடன் நெருக்கமாகவும், கட்சியில் 2-ஆம் நிலை தலைவராக பதவி வகித்தபொழுதும் அர்ஜூன் சிங்கால் பிரதமராக இயலவில்லை. இதில் வேதனையான நிகழ்வு என்னவென்றால் அர்ஜூன் சிங் மரணிப்பதற்கு சற்று முன்புதான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.

போபால் விஷவாயு துயர சம்பவத்தில் யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆண்டர்சனுக்கு உதவினார் என்ற பழியையும் தனது கடைசி காலத்தில் சுமக்கவேண்டிய சூழல் அர்ஜூன் சிங்குக்கு ஏற்பட்டது.

1984-ஆம் ஆண்டு போபால் துயரசம்பவம்தான் அர்ஜூன் சிங்கின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியாகும். அப்பொழுது அர்ஜூன் சிங் மத்தியபிரதேச மாநில முதல்வராக பதவி வகித்துவந்தார். போபால் விஷவாயு துயரசம்பவத்தை எவ்வாறு கையாளவேண்டுமென தெரியாமல் அர்ஜூன்சிங்கின் அரசு திகைத்து நின்றதாக இதுத் தொடர்பான ஏராளமான புத்தகங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின்னர் நரசிம்மராவ் அமைச்சரவையிலிருந்து ராஜினாமாச் செய்தார் அர்ஜூன்சிங். ஆனாலும், நேருவின் குடும்பத்துடனான உறவை அவர் விடவில்லை. பின்னர் திவாரி காங்கிரஸில் சேர்ந்த அர்ஜூன்சிங் தாமதமில்லாமல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் அர்ஜூன் சிங்கிற்கும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்பவராகத்தான் அர்ஜூன் சிங் இருந்தார். இப்பிரிவினர் அர்ஜூன் சிங்கின் வாக்கு வங்கிகளாக இல்லாத பொழுதும் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கோரவேண்டும் என பகிரங்கமாக அறிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் உயர்ஜாதி மேலாதிக்கத்திற்கு சவாலாக விளங்கினார் அர்ஜூன் சிங். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தபொழுது முஸ்லிம்கள் உள்பட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை கொண்டுவரவும் அர்ஜூன் சிங் தயங்கவில்லை.

அர்ஜூன் சிங் தனது கடைசிக் காலத்தில் போபால் துயரசம்பவம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பு ஆகியவற்றால் வேதனையடைந்தார். காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்பை பொறுக்க முடியாமல் ஒருமுறை மேடையில் வைத்து கண்ணீர் விட்டு அழுதார். இவ்வேதனைகளை மீதம் வைத்துவிட்டு அர்ஜூன் சிங் மரணமடைந்துள்ளார்.

அர்ஜூன் சிங்கின் மரணத்திற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் அனுதாபம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் நம்பிக்கையை அளித்த தலைவர் என இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிறுபான்மை,ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நண்பர் அர்ஜுன் சிங் மரணம்"

கருத்துரையிடுக