5 மார்., 2011

போபர்ஸ்௦ பீரங்கி ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மீதான வழக்கை கைவிட நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி,மார்ச்.5:போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு(70) எதிரான வழக்கை கைவிட டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

இந்த வழக்கை கைவிடக் கோரி சிபிஐ தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் 73 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் முடியாமல்போனது. இதுவரை நாட்டு மக்களின் வரிப்பணம் 250 கோடி செலவானதுதான் மிச்சம். எனவே மக்கள் வரிப் பணம் மேலும் விரயமாகாமல் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை கைவிட அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ தனது மனுவில் கோரியிருக்கிறது. இந்த கோரிக்கை நியாயமானது என கருதி, குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை கைவிட இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று நீதிபதி வினோத் யாதவ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மலேசியா, ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு தப்பிச் சென்ற குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவர சிபிஐ தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முயற்சிகள் தோல்வியைத் தழுவியது என்று சிபிஐ கூறியுள்ளதையும் இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

'விறுவிறுப்பான கட்டத்தில் கதையை முடிப்போம்':
இந்த தீர்ப்பை அளிக்கையில் "சரியான முறையில் ஒரு கதையை முடிக்க முடியவில்லை என்றால் விறுவிறுப்பான கட்டத்தில் கதையை முடிப்போம்" என்ற பிரபல ஹிந்தி திரைப்பட பாடலையும் மேற்கோள்காட்டினார் நீதிபதி.

ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் ஸ்வீடன் நாட்டு போபர்ஸ் பீரங்கி நிறுவனத்திடம் இருந்து பீரங்கி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்ப நண்பரும் இத்தாலியைச் சேர்ந்த வர்த்தகருமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி இடைத்தரகராகச் செயல்பட்டார்.

இந்த பீரங்கி பேரத்தில் கோடிக் கணக்கில் கமிஷன் பெற்றதாக குவாத்ரோச்சி மீது புகார் எழுந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரித்தது.

இதையடுத்து இந்தியாவில் இருந்து குவாத்ரோச்சி 1993-ல் மலேசியாவுக்கு தப்பினார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர சிபிஐ எடுத்த முயற்சி வெற்றி அடையவில்லை.

இதனிடையே, இந்தியாவில் 1982-87 வரை நடந்த பல ஊழல், மோசடி தொடர்பாக இவர் மீது சர்வதேச போலீஸூம் (இன்டர்போல்) வழக்குத் தொடர்ந்து அவரை தேடிவந்தது. 2007-ல் அவர் அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார். அப்போதும் அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர சிபிஐ எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவர முடியாது என்றும் இதனால் இந்த வழக்கை கைவிட அனுமதி கோரியும் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், சோனியாவின் குடும்ப நண்பரான ஒட்டாவியோ குவாத்ரோச்சியை காப்பாற்றுவதில்தான் சிபிஐ ஆர்வம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபர்ஸ்௦ பீரங்கி ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மீதான வழக்கை கைவிட நீதிமன்றம் அனுமதி"

கருத்துரையிடுக