Latest Posts

15 மார்., 2011


read more...

பாலைவனத்தூது வாசகர்களுக்கு தூது குடும்பத்தின் வேண்டுகோள்!

அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)

இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச்-15) இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.

பாலைவனத் தூது வலைப்பூ இன்று இரவு முதல் தூது ஆன்லைன்.காம் என்ற இணையதளமாக செயல்படத் துவங்கும்.

ஆகவே பாலைவனத் தூதின் நியூஸ் லெட்டரை மின்னஞ்சல் மூலம் பெற்றவர்கள், தூது ஆன்லைன்.காம்-ன் நியூஸ் லெட்டரை பெற http://www.thoothuonline.com/ தளத்திற்குச் சென்று Subscribe to Our News Feed என்பதை க்ளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளுங்கள்.

பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.

பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

தூது ஆன்லைன்.காம் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி editor@thoothuonline.com

தூது குடும்பம்
read more...

மோடிக்கு உபகாரம் செய்த ஆர்.கே.ராகவன் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

அஹ்மதாபாத்,மார்ச்.15:குஜராத் இனப் படுகொலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவனுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடனான தவறான உறவைக் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்காட்டில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோடியிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்றவர் ஆர்.கே.ராகவன் எனக் குற்றஞ்சாட்டிய கோஹில், இனப்படுகொலை வழக்கில் மோடியை பாதுகாத்ததற்கு கிடைத்த உபகாரம்தான் அவருடைய லண்டன் பயணங்கள் என தெரிவித்துள்ளார்.

ராகவன் பலமுறை லண்டன் சென்றுள்ளார். இப்பயணங்களை அவர் மேற்கொண்டது, தனிப்பட்ட ரீதியிலாகும். மாறாக, குஜராத் இனப்படுகொலை விசாரணை தொடர்பானது அல்ல. மேலும், இப்பயணங்களுக்கான செலவை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதுத் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என கோஹில் தெரிவித்தார்.

தற்போது அமுலிலிருக்கும் சட்டங்களை மீறி ராகவனின் லண்டன் பயணத்திற்கான பில்லை நிறைவேற்றுக் கொடுத்துள்ளது என கோஹில் குற்றஞ்சாட்டுகிறார்.

இதன் மூலம் 2002-இல் குஜராத் இனப் படுகொலையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு குறித்த நம்பிக்கை தகர்ந்துள்ளது.

உண்மையில், சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்தவற்றில் ஆர்.கே.ராகவன் தகிடுதித்தங்கள் புரிந்துள்ளார். கடுமையான குற்றங்கள் மோடியின் மீது சுமத்தப்பட்ட பிறகும், அவர் மீது நடவடிக்கை தேவையில்லை என ஆர்.கே.ராகவன் எழுதிக் கொடுத்தது இதனடிப்படையிலாகும்.

குஜராத் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த புகாரைத் தொடர்ந்து முதல் நோக்கு(prima facie) சரியானது என கண்டறிந்த பிறகுதான் மோடியின் மீது கூடுதல் விசாரணை தேவையில்லை என ராகவனின் அறிக்கை சிபாரிசுச் செய்தது.

உச்சநீதிமன்றம் தன்னிடம் நம்பி ஒப்படைத்த பணியில் வஞ்சம் புரிந்துள்ளார் ராகவன். ராகவன் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் செலவுகள் குறித்த விபரங்களை அளிக்க தகவல் உரிமைச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட மனுக்களை தள்ளுபடிச் செய்த குஜராத் அரசு சிறப்பு புலனாய்வுக்குழு பொது நிறுவனமல்ல எனவும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அமைப்பு என பதிலளித்தது.

ராகவன் மீது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என அஞ்சி இத்தகைய பதிலை குஜராத் அரசு அளித்தது என காங்கிரஸ் தலைவர் கோஹில் குற்றஞ்சாட்டினார்.

செய்தி:மாத்யமம்
read more...

ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு: ம.பி பா.ஜ.க அரசின் தடைகளை முறியடிக்க என்.ஐ.ஏவிடம் வழக்கை ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி,மார்ச்.15:சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைச் செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரிகளில் ஒருவரான சுனில்ஜோஷி கொல்லப்பட்டார். இவருடைய கொலை வழக்கை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் வழக்கை சீர்குலைக்க அம்மாநில பா.ஜ.க அரசு முயல்கிறது. இதனை முறியடிக்கத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏவிடம் ஹிந்துத்துவா குண்டுவெடிப்பு வழக்குகளை ஒப்படைக்க ஆலோசித்தது.

மாநிலங்களின் அனுமதியில்லாமலேயே பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்த என்.ஐ.ஏவுக்கு அனுமதி இருந்த பொழுதிலும் எவ்வித வீழ்ச்சிகள் வராமல் விசாரணையை நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதனைக் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக
அதிகாரிகள் சம்மதித்துள்ளனர். சுனில் ஜோஷி கொலைவழக்கில் மத்திய பிரதேச அரசு குற்றப்பத்திரிகை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பது சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்துமா என்பதுக் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் கொலை வழக்கினை மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.

பல்வேறு குண்டுவெடிப்புகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜோஷியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கொலைச் செய்ததற்கு காரணம், ரகசியம் வெளியாகிவிடும் என்ற அச்சமாகும்.

ஜோஷி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரக்யாசிங் தாக்கூரை கைது செய்வதற்கான மத்தியபிரதேச அரசின் தீர்மானம் கெட்ட எண்ணத்தின் அடிப்படையிலாகும் என சி.பி.ஐ சந்தேகிக்கிறது.

2008-ஆம் ஆண்டு நடந்த மொடாஸா குண்டுவெடிப்பு வழக்கையும், 2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கையும் என்.ஐ.ஏ தற்பொழுது விசாரித்து வருகிறது. இத்துடன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இதர குண்டுவெடிப்புகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது மத்திய அரசின் நிலைப்பாடாகும்.

மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐயும், காங்கிரஸ் கட்சி ஆளும் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களின் அரசுகளும் வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவிடம் அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், பா.ஜ.க ஆளும் மத்தியபிரதேச மாநில அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்

டோக்கியோ,மார்ச்.15:அணுசக்தி ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஸ்டீவ் கேம்பல் தெரிவித்துள்ளார்.

பேரழிவு ஏற்பட்ட ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும், அணுசக்தி நிலையங்களின் வெடிப்பும் உலக அளவில் புதிய விவாதத்திற்கு களம் ஏற்படுத்தியதாக கேம்பல் கூறுகிறார்.

ஹைடெக் தொழில்நுட்ப கட்டமைப்பைக் கொண்ட ஜப்பானில் அணுசக்தி நிலையங்கள் வெடித்துள்ளதால் அணுசக்தி பாதுகாப்பானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.

அதிகமான எரிசக்திக்காக அணுசக்தி நிலையங்களை நிறுவும் பொழுது அதன் பாதுகாப்பு மனிதன் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கேம்பல் கூறுகிறார்.

உலகில் எங்கும் எப்பொழுதும் இத்தகைய துயரங்கள் ஏற்படலாம். இது அணுசக்தி நிலையங்களைக் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது என கேம்பல் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

போராட்டம்:பஹ்ரைன் அயல்நாடுகளின் உதவியை தேடுகிறது

மனாமா,மார்ச்.15:அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் பஹ்ரைனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த அயல்நாடுகளின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.

வளைகுடா நாடுகளைச் சார்ந்த ராணுவத்தினர் மனாமாவுக்கு வருகைப் புரிந்துள்ளதாக முன்னாள் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரும், நீதிமன்ற ஆலோசகருமான நபீல் அல் ஹாமர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிலையங்கள், மின்சாரம், குடிநீர் விநியோக மையம், வங்கிகள் ஆகிய இடங்களில் வெளிநாட்டுப் படையினர் நிறுத்தப்படுவர். நாட்டில் எதிர்ப்பாளர்கள் பிரிவினையைத் தூண்ட முயலும் சூழலில் ராணுவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லா நகரங்களிலும் ராணுவத்தை அனுப்ப வேண்டுமெனவும், ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர்கள்
மன்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி

டெல்அவீவ்,மார்ச்.15:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு யூனிட்டுகள் புதியதாக கட்டப்படும். அமைச்சரவை கமிட்டியின் அனுமதி நேற்று கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபலஸ்தீனுடனான சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபீல் அபூ தய்னா பிரச்சனைகளை உருவாக்க இஸ்ரேல் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

வருகிற நாட்களில் குடியிருப்புகளை கட்டும் பணி துவங்கும் என இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார். குடியிருப்புகளை கட்டும்பணி துவங்கியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனுடனான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்

டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.

கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல் செயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

செய்தி:மாத்யமம்
read more...

கஷ்மீர்:கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 கோடி நிதியுதவி

ஜம்மு,மார்ச்.15:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட 102 நபர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிதியுதவியாக 5.10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும். இதனை கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கஷ்மீரில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 894 பேர் காயமடைந்தனர். 18 பேருக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

எகிப்து:ஜனநாயகம் மலருமா? 19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு

கெய்ரோ,மார்ச்.15:அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை தடைவிதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை நீக்குவதற்கு எகிப்தின் ராணுவ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து நடக்கவிருக்கும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பைத் தொடர்ந்து இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.

அரசியல் எதிரிகளை 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த முபாரக்கிற்கு உதவிய சட்டமாகும் இது. இந்த தீர்மானம் பாராளுமன்ற, அதிபர் தேர்தல்கள நேர்மையாக நடக்க உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முன்பு புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால் முபாரக் கட்சியினர் அதிகமாக அங்கம் வகுக்கும் குழு அங்கீகாரம் வழங்கவேண்டும். இனி இது தேவையில்லை. எகிப்தில் ஜனநாயக புதுவசந்தம் வீச வாய்ப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்படும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு வருகிற மார்ச் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தல், எதிர்கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தல், சுயேட்சைகளின் போட்டியிடும் உரிமையை உறுதிச் செய்தல் போன்ற காரியங்களில் மக்கள் தங்கள் விருப்பத்தை பதிவுச் செய்வர்.

எதிர்கால அதிபர்களின் பதவி காலம் இரண்டு தடவை மட்டுமே என்பதுக் குறித்த விஷயத்திலும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுச்செய்வர். ஆனால், அரசியல் சட்டத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான பிரிவுகளை மாற்றுவதற்கு போதுமானதல்ல இந்த நெறிமுறைகள் என சிலர் விமர்சித்துள்ளனர்.

புதிய நெறிமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எகிப்தின் மிகப்பெரிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, 1981-ஆம் ஆண்டு எகிப்துல் அதிபர் அன்வர் சதாத்தை கொலைச் செய்ததில் பங்குண்டு எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேரை ராணுவ கவுன்சில் விடுதலைச் செய்துள்ளது.

செய்தி:மாத்யமம்
read more...

ஜப்பான்:மீண்டும் பூகம்பம், புகுஷிமாவில் வெடிக்கத் தயாராகும் 4வது அணுஉலை

டோக்கியா,மார்ச்.15:ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 6.3 ரிக்டர் ஸ்கேல் அளவில் பதிவாகியுள்ளது.

பூகம்பத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புகுஷிமாவில் மீண்டும் மற்றொரு அணுஉலை வெடிப்பு ஏற்படப் போகிறது. ஏற்கனவே மூன்றாவது அணுஉலையின் மேல் பகுதியில் ஹைட்ரஜன் வாயு அடைந்து மூடியதால் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மூன்றாவது அணு உலையிலிருந்தும் புகை வெளிவரத் துவங்கியுள்ளது.

சுனாமியினால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி

காபூல்,மார்ச்:ஆப்கானிஸ்தான் மாகாணமான குனாரில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையான நேட்டோவின் கொடூரத் தாக்குதலில் 9 குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், 'அமெரிக்காவுக்கு சாவு', 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாவு' என முழக்கமிட்டனர்.

குனார் மாகாணத்தில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கொலைச் செய்ததுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என நேட்டோவின் கட்டுப்பாட்டிலுள்ள இண்டர்நேசனல் செக்யூரிட்டி அஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்(ISAF) தெரிவித்துள்ளது.

செய்தி:ப்ரஸ் டி.வி
read more...

ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி

பாக்தாத்,மார்ச்.15:ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் கட்டிடம் தகர்ந்து வீழ்ந்து ஏராளமான ராணுவத்தினர் உள்ளே சிக்கியுள்ளனர். இவர்களை வெளியேக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தியாலா மாகாணத்திற்கு அருகில் காரில் வந்த நபர் ராணுவ தலைமையகத்திற்கு அருகே வெடித்துச் சிதறினார். மேலும் ஒரு குண்டு கண்டிபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

செய்தி:மாத்யமம்
read more...

ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்

பெர்லின்,மார்ச்.15:ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை நீட்டிப்பதுக் குறித்த அரசுத் திட்டத்தை கண்டித்து ஸ்டூட்கர்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

45 கிலோமீட்டர் நீண்ட மனித சங்கிலியில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

அணுசக்தி கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்பது ஜப்பானில் நிரூபணமாகியுள்ளது என போராட்டத்தில் கலந்துக் கொண்டோர் தெரிவித்தனர்.

அங்கலா மெர்கலின் அரசு அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை கடந்த ஆண்டு ஒருவருடத்திற்கு நீட்டியது. ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்புக் குறித்து அரசுக்கு பூரணமான தன்னம்பிக்கை உள்ளதாக மெர்கல் கூறுகிறார்.

செய்தி:மாத்யமம்
read more...

14 மார்., 2011

ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை

மெல்பர்ன்,மார்ச்.13:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடல் கடந்த வாரம் சிட்னியில் ஒரு கால்வாயில் சூட்கேஸிற்குள் வைத்து கண்டெடுக்கப்பட்டது. மெடோ வங்கிக்கு அருகில் சூட்கேஸை கண்ட கட்டிடத் தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இக்கொலைத் தொடர்பாக தோஷாவின் அயல்வாசி ஸ்டானி ரெஜினால்ட் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் வன்புணர்வு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்டானி ரெஜினால்டின் முன் ஜாமீன் கோரும் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கொல்லப்பட்ட 24 வயதான தோஷா தாக்கர் சிட்னி காலேஜ் ஆஃப் பிஸினஸ் அண்ட் ஐ.டியில் கணக்கியல் துறை மாணவியாவார். இவரது கொலைக்கான பின்னணி தெரியவில்லை.

செய்தி:மாத்யமம்
read more...

அமெரிக்கா:பி.ஜே.க்ரவ்லி ராஜினாமா

வாஷிங்டன்,மார்ச்.13:அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார் பிராட்லி மானிங். இவர் அமெரிக்க ராணுவ உளவுத்துறையில் பகுப்பாய்வாளராக பணியாற்றியவர். இவரை அமெரிக்க ராணுவம் நடத்தும் முறை குறித்து பி.ஜே.க்ரவ்லி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார்.

பி.ஜே.க்ரவ்லியின் விமர்சனம் அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் செயல் பரிகசிக்கத்தக்க, முட்டாள்தனமான, விவேகமற்றது என பி.ஜே.க்ரவ்லி கூறியிருந்தார். இது தனது தனிப்பட்ட அபிப்ராயம் எனவும், இதன் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் பின்னர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்திருந்தார்.

க்ரவ்லியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

க்ரவ்லியின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணைச் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் மைக்கேல் ஹாமர் தற்காலிகமாக க்ரவ்லியின் பதவியை வகிப்பார் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

கடந்த 2009 மே மாதம் முதல் அமெரிக்க அரசுத்துறையில் செய்தித் தொடர்பாளராக சேவையாற்றி வந்தார் க்ரவ்லி. கிளிண்டன் ஆட்சியின்போது பாதுகாப்பு ஆலோசகரின் சிறப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

செய்தி:மாத்யமம்
read more...

ஜப்பானில் தொடரும் அணுஉலை வெடிப்பு - 3 வது வெடிப்பால் 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்

சுமோ(ஜப்பான்),மார்ச்.13:ஜப்பானில் அணு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையமான ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணுஉலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணு உலைகளும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள போதிலும், எந்த கட்டுப்பாடு முறைகளுக்கும் அடங்காமல், அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.

ஃபுகுஷிமா டாய்ச்சி அணு சக்தி நிலையத்தில் 5 ரியாக்டர்கள் உள்ளன. இவை ஐந்துமே அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இவற்றில் முதல் அணுஉலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து பெரும் புகையுடன் ஹைட்ரஜன் மற்றும் அணு உலைக் கழிவுத்துகள் வெளியேறி வருகின்றன. இதில் மொத்தம் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் முழுமையான கதிரிவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டாவது அணு உலை இன்று காலை 5 மணிக்கு வெடித்தது. இதிலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிற்பகலில் ஜப்பான் நாட்டு நேரப்படி 2.41-க்கு வெடித்துள்ளது. இதிலிருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சுப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அது இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

அருகாமைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அணுசக்தி நிலையத்திலிருந்து 20 கிமீக்கு அப்பால் வசிப்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா - நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
read more...

கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்

டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.

எச்சரிக்கை தகவல் கிடைத்த உடனேயே, பூகம்பம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ அரைமணி நேரம் முன்பே கடையை பூட்டிவிட்டு விரைவாக வீடு திரும்பினார் அவர். வீட்டு கதவை தகர்த்தெறிந்த பேரலை வயோதிகரான பெற்றோரை தூக்கி வீசிய காட்சிகளைத்தான் அவரால் பின்னர் காணமுடிந்தது.

பர்னிச்சர்களின் மேலே ஏறி தப்பிக்க முயன்ற அவரின் கழுத்துவரை தண்ணீர் திரண்டு நின்றது. வீட்டின் முகட்டை தண்ணீர் தொடுவதற்கு சில இன்ச்கள் இடைவெளி. மரணம் தன்னை விட்டுச்சென்ற அந்த கணத்தை மறக்க முடியவில்லை என கூறும்பொழுது வதனாபெயின் கண்களில் கண்ணீர் நிறைந்துக் காணப்படுகிறது.

ஜப்பானில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய பேரழிவில் பெருமளவு பாதிக்கப்பட்ட மியாகியில் அபூர்வமாக உயிர் தப்பிய ஒரு சிலரில் வதனாபெயும் ஒருவர்.

வாகனங்களையும், கட்டிடங்களையும் துடைத்தெறிந்த சுனாமி பேரலை மீதம் வைத்தது கதறல்கள்தாம்.

பூகம்பத்தைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய புகஷிமா அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள கடலோரப் பகுதிதான் மியாகி. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இங்கு உயிர் நஷ்டமானது. பலரும் உறவினர்களை இழந்தனர். உணவு, தண்ணீரும் இவர்களுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது. பள்ளிக்கூடங்கள் தகர்ந்து போனதால் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர இன்னும் நாட்கள் நீளும். திறக்காத கடைகள் முன்னால் ஆட்கள் நிற்கின்றனர். ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பெட்ரோல் பம்பிற்கு முன்னால் மூன்று கிலோமீட்டர் தூரம் க்யூவில் மக்கள் நிற்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

லிபியா:ப்ரீகாவில் கடும் மோதல்

திரிபோலி,மார்ச்.14:லிபியாவின் கிழக்கு எண்ணெய் நகரமான பிரீகாவில் கத்தாஃபி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

கத்தாஃபிக்கு ஆதரவான ராணுவம் எதிர்ப்பாளர்களிடமிருந்து நகரத்தை மீட்டதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.

உகாயலாவின் கட்டுப்பாட்டை தன் வசப்படுத்திய ராணுவம் பிரீகாவை மீட்பதற்கு கடுமையான தாக்குதல்களை நடத்திவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பிரீகாவை கைப்பற்றியதாக நேற்று முன் தினம் அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

பிரீகாவிற்கு அடுத்துள்ள பிஷரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கத்தாஃபியின் மகன் கமீஸின் ராணுவப் படையில் 32 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதேவேளையில், லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டுமென அரபு லீக் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவிலியன்களை கொலைச் செய்வதை முடிவுக்குக் கொண்டுவர இது முக்கியத்துவம் வாய்ந்தது என அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக விவாதிப்பதற்காக கூடிய அரபு லீக்கின் கூட்டத்திற்கு பிறகு தெரிவித்தார் அவர்.

கடந்த சனிக்கிழமை மாலை கத்தாஃபி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட அல்ஜஸீராவின் கேமராமேன் அலி ஹஸன் அல் ஜாபிரின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அல்ஜாபிரும் அவரது சக ஊழியர்களும் தாக்கப்பட்ட பெங்காசியில் உயிர்தியாகிகள் மைதானத்தில் பெரும் மக்கள் திரள் பங்கேற்ற ஜனாஸா தொழுகையும், அனுதாப நிகழ்ச்சியும் நடந்தன. அல்ஜாபிரின் உடல் அடக்கம் செய்வத்ற்கு சிறப்பு விமானத்தில் கத்தருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லிபியாவின் மிஸ்ரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டளித்த முஸ்லிம்கள் சமீப ஆண்டுகளாக அரசியல் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கருத்து வேகமாக ஒலித்து வருகிறது. திருமாவளவனையும் ராமதாசையும் இவர்கள் உதாரணமாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை இனம் கண்டு வெளியிட்டனர்.

பெரும்பான்மையினரின் கூற்று 'நாம் இனியும் யாருக்கும் ஓட்டளித்து ஏமாறக் கூடாது. நாம் தனித்து போட்டியிட வேண்டும்' என்பதாகவே இருந்தது. கருத்துக்களை தாங்கள் கூறிய அடுத்த நிமிடத்திலேயே மற்றவர்கள் இதனை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்பினர். இது நடக்காது போகவே முஸ்லிம்களின் இயக்கங்களையும் தலைவர்களையும் வசைமாறி பொழிய ஆரம்பித்தனர்.

ஆனால் இனியும் இவர்கள் இதனை தொடர முடியாது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக தாங்கள் போட்டியிடப் போகும் ஆறு தொகுதிகளையும் அறிவித்துள்ளனர். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்கிளல் வெற்றி எண்ணிக்கையை தொடங்கியுள்ளனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு கட்சி அல்ல. தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி.

முஸ்லிம்களுக்கு ஐந்து சதவிகித இடஒதுக்கீடு, வக்ஃப் சொத்துக்களை முறைப்படுத்துதல், தேர்தலில் முஸ்லிம்களுக்கு பத்து தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்வது என்ற நிலைப்பாட்டை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த கட்சியும் முன் வராத நிலையில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எடுத்துள்ளது.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை என்பதை தான் இக்கட்சிகளின் நிலைப்பாடு நமக்கு உணர்த்துகிறது. இச்சூழலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் முடிவு சரியான முடிவாகவே நமக்கு படுகிறது.
தற்போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது. இனியும் கட்சிகளும் இயக்கங்களும் எதுவும் செய்யவில்லை என்று காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இனி இவர்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதுதான் மக்களின் கடமை.

தேர்தலில் போட்டியிடும் மற்ற முஸ்லிம் கட்சிகளும், பிற கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களும் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடாமல் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை முற்றிலும் விரும்பாத திராவிட கட்சிகளும் அவர்களின் கூட்டாளிகளும் நிச்சயம் இந்த முயற்சியை மேற்கொள்வார்கள். எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் தங்களின் சார்பாக முஸ்லிம் வேட்பாளர்களையோ அல்லது தங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம்களுக்கு இத்தொகுதிகளை வழங்குவதற்கு முன்வருவார்கள். இந்த வலையில் முஸ்லிம்கள் சிக்கி விடக்கூடாது.

திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இவர்களும் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் சிலரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு சமுதாய நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

சந்திக்கும் முதல் தேர்தலிலேயே வெற்றியை அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாம் எதுவும் கிடையாது. இனியும் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பிற கட்சிகள் உணர வேண்டும். அதற்கு இத்தேர்தலை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.

'எதுக்குங்க தனியா நிக்கனும்?''எதுக்கு கூட்டணியில நிக்கனும்?' என்று ஹாயாக உட்கார்ந்து கொண்டு கேள்விகளை கேட்காமல் முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்திற்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். அரசியல் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதை இன்று பாமரர்களும் அறிந்து கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இன்னுமா உறக்கம்?
சிந்தனைக்கு
-ஏர்வை ரியாஸ்
read more...

ஜப்பானை தாக்கிய ஆழிப்பேரலை​களும்! சென்னையை தாக்கிய ஆழிப்பேரலை​யும்?!!!.....

11-மார்ச்-2011 இப்படியொரு வெள்ளிக்கிழமை ஜப்பானியர்களுக்கு விடியாமல் இருந்திருக்கலாம். 140 வருடங்களில் இல்லாத அளவிற்கு இயற்கையின் பேரழிவு சுனாமி என்ற ஆழிப்பேரலையின் வடிவில் ஜப்பானின் வடகிழக்கு நகரமான செண்டாயை தாக்கியுள்ளது.

8.9 ரிக்டர் அளவில் பெரும் நில நடுக்கத்தினையடுத்து 02:46 பிற்பகல் உள்ளூர் மணியளவில் முதலில் சுனாமி தாக்கியுள்ளது.
பின் தொடர்சியாய் அலையலையாய் தாக்கியுள்ளது அதனையடுத்து சுமார் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது.

இன்று அதிகாலையிலேயே சென்னையை ஒரு சுனாமி தாக்குகிறது என்ற செய்தி அறிந்து தொலைக்காட்சி முன் அமர்ந்தால் மதியம் ஜப்பானில் மிகக் கொடூரமான நில நடுக்கம் என்ற செய்தி உலக மக்களை எல்லாம் கவலைக்குள்ளாக்கியது.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் கொடூர பாதிப்புகளை பார்த்த அதிர்ச்சியில் உள்ளூர் செய்திகள் நம் மனதைவிட்டு நீங்கி விட்டது.

வாழ்நாளிலே எவரும் பார்த்திராத மனதை உருக வைக்கும் காட்சிகளாக தொடர்ந்து வருகிறது. வானத்தில் பறந்து கொண்டே நகரின் அழிவினை காணொளியில் பதிவு செய்து நேரடியாக அனைத்து தேசிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.

கற்பனைக்கு எட்டாத அழிவுகள். நகரத்திற்குள் புகுந்த சுனாமி ஆழிப்பேரலை கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, மார்பில் ஒன்று என அப்பிக் கொண்ட பிள்ளைகளை ஊருக்கு அழைத்துச் செல்லும் அவசர தாய் போல அரித்து கொண்டு செல்கிறது, இருப்பிடம் மாற்றி கொண்ட கடல் நகரத்திற்குள் புகை போல பரவியது, அது பயணிக்கும் எல்லா நிலப் பரப்புகளையும் தனது வடிவமாகவே மாற்றுகிறது. நகரமே நகர்ந்து செல்கிறது. வீடுகளும்,மாளிகைகளும், கட்டங்களும், வாகனங்களும், படகுகளும் மென்று தின்ற சக்கைகளாக, மந்திரத்திற்கு கட்டுப்பட்டு ராட்ச ஆழிஅலைகளுடனே மறு பேச்சின்றி பயணிக்கிறது.

கடலலைகள் பயணிக்கும் முன்னர் அது கட்டடமாகவும், வாகனமாகவும், மனிதனென்றும் ,மிருகமென்றும் மரமென்றும் தனித் தனியாய் இருந்தது, கடல் அலைகள் அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்து ஒரு நாசகர கொள்ளைக்காரனாய் அனைத்தையும் இழுத்துக் கொண்டு செல்கிறது. பேரலை கடந்து போகும் இடமெல்லாம் உயிர் எது, உடல் எது ,வலி எது என்று எதுவுமாய் இல்லாமல் ஒரு பரமபொருள் திராவக கலவையாக அலைந்து அலைந்து அழித்து எடுக்கிறது.

ஜப்பானின் பல நகரங்கள் மிதக்கும் தண்ணீர் கலவை ஆனது. ஒரு பக்கம் பேரலை நீரின் அடித்து துவைக்கும் ஆக்கிரமிப்புகள், இன்னொரு பக்கம் உருவங்களை உருக்குலைத்து குழுக்கி எடுக்கும் நிலநடுக்கங்கள், உயரங்கள் எல்லாம் குப்பைகளாகவும் இரத்தங்களாகவும் சிதைந்து கிடக்கிறது. கட்டடங்கள் எல்லாம் குழந்தைகளின் தொட்டில்களாய் ஆடுகிறது.

கழுத்தளவு தண்ணீரில் மிதக்கும் போது தலையில் நெருப்பு பற்றி எரிவது. போன்ற வினோத காட்சிகள், சுற்றிலும் சுனாமி வெள்ளம் அடித்து செல்கிறது, நகரங்கள் பற்றி எரிகிறது. கோபுரங்கள் மண்ணானது, மண்ணெல்லாம் தண்ணீரானது அது மக்களின் கண்ணீரானது. நில நடுக்கத்தை தொடர்ந்த தீ விபத்துக்களால் பற்றி எரியும் நகரங்கள், உடைந்து நொருங்கும் கட்டிடங்கள், அடித்துச் செல்லும் சுனாமி ஆழிப்பேரலை என்று எல்லா வகையிலும் அந்த சின்னஞ் சிறு நாட்டிற்கு பேராபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் மின் உற்பத்திகளில் முக்கிய பங்களிக்கும் ஐந்து அனுமின் நிலையங்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று வெடித்து அணுக் கதிரியக்கத்தை வெளியேற்ற ஆரம்பித்து விட்டது. புவிஅதிர்வுகளையும், சுனாமி அலைகளையும் கடந்து உயிர் பிழைத்த மக்கள் அடுத்து அணு உலைகள் வெளிப்படுத்த இருக்கும் கதிரியக்கத்தை நினைத்து அச்சமடைய வேண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாய் வெளியேறி வருகின்றனர். சுற்றிலும் தண்ணீர் மரணம் சூழப்பட்டபோது மிஞ்சி இருக்கும் மக்கள் எந்த திசைகளும் இனி தன் உயிரை காப்பாற்ற போவது இல்லை என்ற நிலையில் அறுக்கபோகும் ஆட்டு குட்டியைப் போல மிரண்டு அங்கேயே நிற்கின்றனர்...

வானிலிருந்து பார்க்கையில் தரையில் பரவும் ஒரு திரவமாக நகரத்தை அரித்து செல்கிறது. இழுத்து செல்லும் தண்ணீர் கலவையில் எத்தனை உடல்களும், உயிர்களும், உறவுகளும், பாசங்களும், ஆணவங்களும், கனவுகளும் மிதக்கின்றன என்பதை யார் அறிவார்?...

பாதசாரிகள் முதல் நாடாளும் பிரதமர் வரை எல்லோரும் மரணத்தை அருகில் பார்த்த அதிச்சியில் உறைந்து போய் உள்ளனர். இறந்தவர்களை விட படுகாயம் பட்டு உயிர் பிழைத்தவர்களின் துயரம் பெரும் கொடுமை, அன்பானவர்களை இழந்து அனாதையாய், உணவின்றி, உறைவிடமின்றி, தூக்கமின்றி, எந்த அடிப்படை தேவைகளும் இன்றி மீண்டும் ஒரு முறை இந்த உலகத்தில் தன் இருப்பை பதிவு செய்யபோகும் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது.

அத்தனை பேரிடர்களுக்கு பின்னும் பல உயிர்களை பறிகொடுத்தும், மிகவும் மனத் தைரியத்துடன் வாழ்கையை தொடங்குவதற்கு மீண்டும் தன் நாட்டை உலகத்தின் முன்னோடி நாடாய் மீண்டும் புணரமைக்க போராடிவரும் ஜப்பானிய மக்களின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு துணையாய் உலக நாடுகள் முன்வரவேண்டும்.

சுனாமி என்ற வார்தையே ஜப்பானியர்களுடையது தான். இதுவரை 195 முறையேனும் அவர்கள் சுனாமி பேரழிவுகளை சந்தித்து வந்திருப்பார்கள். ஜப்பானிய மக்கள் தங்களது இளம் வயதிலிருந்தே இயற்கை இடர்பாடுகளுக்கிடையே வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக மனதளவில் எப்பொழுதுமே தங்களை தயார் நிலையிலேயே வைத்துகொள்கிறார்கள். அவர்களின் கட்டங்களும், உள்கட்டமைப்புகளும் இயற்கை போரழிவுகளுக்கு தாக்குபிடிக்கும் விதமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனிதன் இயற்கையின் ஆதிக்கத்தின் பிடியில் செயலற்றவனாய் முடங்கிவிடுகிறான்.

ஓய்வறியாது எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கும் ஜப்பானை இன்று ஆழியலை எந்த ஒரு வரையரையும் இல்லாமல் இயக்கிவருகிறது.
மரணம் எப்பொழுதும் வரலாம் என்ற போதும் தங்களின் தன்னம்பிக்கையினாலும் விடா முயற்சியினாலும் அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிலப்பரப்பில் மிகவும் குட்டி நாடென்றாலும், இயற்கை அழிவுகளால் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் இன்று உலகில் பயன்படுத்தும் எல்லா மின்னனு பொருட்களும் கார்களும் ஜப்பானியர்களுடையது, எல்லா நூற்றாண்டுகளுக்குமான தொழில் நுட்பத் தாய் ஜப்பான். மீண்டும் துளிர்த்தெழும் ஜப்பான் தன்னம்பிக்கையோடு...

இன்னொரு சுனாமி சென்னையை தாக்கியதாய் குறிப்பிட்டு இருந்தேன் அது வேறெங்கும் இல்லை முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் புகுந்த சிபிஐ வேட்டை தான்.

ரொம்ப நாளாய் தாய் வீட்டிலேயே இருக்கும் கனிமொழியை மாமனார் வீட்டுக்கு கொண்டு செல்லும் நோக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரனையை தொடங்கியுள்ளனர்.

சி.பி.ஐ அதிகாரிகள்., டிபி ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்பதை காலையிலேயே விசாரிக்கத் தொடங்கினர். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளின் உரிமையாளர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாவும் விசாரிக்கப்பட்டார். இதே கனிமொழியை வைத்து தான் 63 தொகுதிகளையும் மிரட்டி வாங்கியது காங்கிரஸ், இப்பொழுது எந்தெந்த வெற்றித் தொகுதிகள் வேண்டும் என்று செல்லமாய் மிரட்டுவதற்காக இந்த சிபிஐ சுனாமி இருக்கலாம், இல்லை உச்ச நீதிமன்றம் போட்ட போடில் சென்னையை முற்றுக்கையிட்டிருக்கலாம் சிபிஐ.

ஆக மொத்தம் உள்ளூரில் ஒருவனை அடிபணிய வைப்பதற்கு ரவுடிகளை வைத்து மிரட்டுவார்கள் இல்லை என்றால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவார்கள். அது போலத்தான் இங்கு சிபிஐயை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தனது அடியாள் போல் வைத்துள்ளது.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து கருணாநிதி ஒரு சுனாமி ஒன்றை டெல்லி நோக்கி அனுப்பினார். சமிபத்தில் சென்னையை கலங்கடித்த சுனாமி காங்கிரஸிடமிருந்து திருப்பி விடப்பட்டது. தமிழுக்காக சாவேன் என்று இடியாய் முழங்கிய தலைவன். மனிதகுல விரோதி ராசபக்சே தமிழ் இனத்தையே முற்றிலுமாக அழித்த போதும் காங்கிரஸுடன் கை கோர்த்து உல்லாசமாய் திரிந்த தமிழ் இனத் தலைவன் தன் குடும்பத்திற்குள் புகுந்த சுனாமியால் இன்று தகர்ந்துபோய் கிடக்கின்றார்.

இனி அடுத்தடுத்து வரப்போகும் சுனாமிகளை நினைத்து நடுங்கி போய் உள்ளார் கருணாநிதி. இது வழக்கமான அரசியல் மோடி வித்தைகள் தான். மற்றபடி இந்தியர்களுக்கு ஊழல் சுனாமிகள் புதுமையானது ஒன்றும் இல்லை, ஜப்பானியர்கள் எப்படி இயற்கை சீரழிவுகளுடன் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்களோ அதே போல் இந்தியர்களும் தங்களை சூழ்ந்துள்ள ஊழல் சுனாமிகளுக்குள்ளேயே சகித்துக் கொண்டு வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது இயற்கை பேரழிவு ஏற்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்களை கொண்டது இந்தியா, அதில் தான் உலகளவில் பட்டினிச் சாவுகள் அதிகமாக நடைபெறுகிறது. உணவு உற்பத்தியில் அதிகமாக இருக்கும் இந்தியாவில்தான் உணவிற்கு பதிலாய் எலிகளை மற்றும் மலத்தை திண்ணும் கொடுமையும் நடக்கிறது.

தொழிற் துறைகளில் முன்னோடியாய் இருக்கும் நம் நாட்டில் தான் வேலையின்மை அதிகமாய் இருக்கிறது. நடுத்தர மக்களை பிச்சைக் காரர்களாக மாற்றும் இந்த சமூகத்தில் தான் உலகமே அதியசயக்கும் ஊழல்களும், பதுக்கி வைக்கப்படும் கருப்பு பணங்களும் உள்ளது.

இயற்கைக்கும் செயற்கைக்குமான இடைவெளிகள் அதிகமாகி கொண்டே வருகிறது. மேல்தட்டு மக்களுக்கும் கீழ்தட்டு மக்களுக்குமான இடைவெளிகள் அதிகமாகும் போது பேரழிவுகள் நிச்சயமாக நடைபெறும்.

இந்தியாவில் சமீபத்திய ஊழல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக ஊழல் அளவுகோல்களில் பதிவாகியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பசி, வேலையின்மை, விலைவாசி உயர்வு, விரக்தி, ஆதிக்க, அதிகார மையங்களின் வேட்டை, கேலி கூத்தாகும் ஜனநாயக மாட்சிமை என வாழ்கையை சூன்யமாக்கும் பல சுனாமிகளை இந்தியாவும் தினம் தோறும் சந்தித்து வருகிறது.

எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் என்பது உறுதி அதற்குள் நாம் இந்த சமூகத்தில் எப்படியான வாழ்கையை நாம் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டியது நம் கடமை.

ஒவ்வொருவருக்குள்ளும் உற்பத்தியாகும் சுனாமி ஒருசேர கொதித்தெழும் பொழுதுதான் சமூகப் புரட்சி எனும் சுனாமி உருவாகும்.

மால்கம்-X ஃபாரூக்
read more...

ஒமான்:ஆட்சி நிர்வாகத்தில் மக்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்

மஸ்கட்,மார்ச்.14:நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் அரசக் குடும்பத்தைச் சாராதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க ஒமான் மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸைத் தீர்மானித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சட்ட நிர்ணய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மன்னர் நியமிக்கும் உறுப்பினர்கள் அடங்கு கமிட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரங்களில் பங்களிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை கவனத்தில் கொள்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒமானின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடந்திருந்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் மன்னர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சரவையை கலைக்கப் போவதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சிவில் சர்வீஸ் நியமனங்கள் நடத்தப்படும் எனவும் மன்னர் அறிவித்துள்ளார். சட்ட நிர்மாணத்திற்கு இரண்டு கமிட்டிகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட பொழுதிலும் மன்னருக்கான வீட்டோ அதிகாரம் உண்டுமா என்பதுக் குறித்து தற்பொழுது உறுதிச் செய்யப்படவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

பாகிஸ்தான்:துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் மரணம்

இஸ்லாமாபாத்,மார்ச்.14:வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் வேன் ஒன்றின் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

ஹன்கு மாவட்டத்தில் மாம்மோகவாரிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்றுக் கொண்டிருந்த வேன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின் பொறுப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே ஹன்கு மாவட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்

புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா
உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.

அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

32.5 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியதை விட 40 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 70 சதவீதத்தையும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் 82 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன.

ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ள சமீபத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகைப் புரிந்ததாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் 57 ஹவுக் நவீன ட்ரைனர் ஜெட் இறக்குமதிச் செய்வதற்கான 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்த பொழுது 10 சி-17 ட்ரான்ஸ்போர்ட் ஏர்க்ராஃப்ட் இறக்குமதிச் செய்வதற்கான 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தார். பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு வருகைத் தந்தபொழுது பிரான்சிலிருந்து மிராஜ் 2000 ஃபைட்டர் ஏர்க்ராஃப்ட் வாங்குவதற்கான 2.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.

இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகைத் தந்த ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தனது சுற்றுப்பயண வேளையில் ஐந்தாவது தலைமுறை ஃபைட்டர் ஏர்க்ராஃப்டுகள் உருவாக்குவதற்கான ஒருங்கிணந்த திட்டத்தை துவக்கிவைத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

கஷ்மீர்:ஷபீர் ஷாவின் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - 25 சங்க்பரிவார் குண்டர்கள் கைது

கத்வா,மார்ச்.13:ஜம்மு கஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் டெமோக்ரேடிக் பீப்பிள்ஸ் ஃபாரம்(DPF) தலைவர் ஷபீர் ஷா ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற பா.ஜ.க, சிவசேனா, பஜ்ரங்தள் குண்டர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

DPF-இன் தலைவரான ஷபீர் ஷா க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். ஷபீர் ஷா ஹோட்டலுக்கு வந்தவுடன் ஏற்கனவே அங்கு திரண்டிருந்த சங்க்பரிவார் குண்டர்கள் அவருக்கெதிராக கோஷமிட்டு நிகழ்ச்சியை தடுக்க முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை
தடுத்தனர்.

கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டுமென ஷபீர் ஷா அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ

புதுடெல்லி,மார்ச்.13:சம்ஜோத எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களை தேடி தேசிய புலனாய்வு ஏஜன்சி நேபாளத்திற்கு சென்றுள்ளது.

குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் நேபாளத்தில் தலைமைறைவாகியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ நேபாளம் சென்றுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மொடாஸா, மலேகான் ஆகிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் நேபாளத்தில் ரகசியமாக தங்கியிருப்பதாக அந்நாட்டிலிருந்து என்.ஐ.ஏவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நேபாளத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தொடர்புகள் குறித்து பரிசோதித்த பொழுது புலனாய்வு அதிகாரிகளுக்கு இவ்விஷயம் தெரியவந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்துவரும் இவர்களுக்கு உதவி புரிந்தவர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டது.

2010-ஆம் ஆண்டு மே மாதம் வரை ராம்ஜி கல்சங்கரா ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்துள்ளார். இதனை என்.ஐ.ஏ உறுதிச் செய்துள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு இவர் மேற்குவங்காளத்திலும் தலைமறைவாக தங்கியிருந்தார். இவரின் இடது காலில் மூட்டிற்கு கீழே காயத்திற்கு தையல் போட்ட அடையாளம் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தலைமறைவாக வாழும் காலக்கட்டத்தில் இவர் தனது வீட்டினருடன் தொலைபேசியில் தொடர்புக் கொள்வதில்லை. வழக்கமாக லேப்டாப் உபயோகிக்கும் இவரின் கழுத்தில் ஒரு பென் ட்ரைவ் எப்பொழுதும் தொங்குவதாக கல்சங்கராவின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டதில் தெரியவந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

நேபாளத்தில் டாங்கேவுக்கு உறவினர்கள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்கண்டில் வைத்து கல்சங்கராவை டாங்கே சந்தித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானாந்தா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் இவர்களிருவரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது என்.ஐ.ஏ.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை விசாரித்துவரும் சி.பி.ஐ குழுவினர் அஸிமானந்தாவை கைது செய்தபொழுது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு பங்குள்ளது தெளிவானது.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளை ஒருங்கிணைத்த சூத்திரதாரிகளான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டால் புலனாய்வில் திருப்புமுனையாக அமையும் என என்.ஐ.ஏ நம்புகிறது.

இந்தூர் அரசு பொறியியல் கல்லூரியிலிருந்து பொறியியல் பட்டம் பெற்ற டாங்கேவும், மும்பை ஐ.டி.ஐயிலிருந்து டிப்ளமோ பட்டம் பெற்ற கல்சங்கராவும் வெடிக்குண்டுகளை தயார் செய்வதில் வல்லுநர்களாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஃதனியை சந்திக்க மனைவிக்கு அனுமதி

திருவனந்தபுரம்.மார்ச்.14:பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மஃதனியை சந்திக்க அவருடைய மனைவி சூஃபியா மஃதனிக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பேரூந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சூஃபியா மஃதனி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூஃபியா மஃதனி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை எர்ணாகுளத்தில் போலீஸ் முன் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லகூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சூஃபியா மஃதனிக்கு மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசால் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் மஃதனியை சந்திக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சூஃபியா மஃதனி மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார்.

மஃதனியை சந்திக்க பெங்களூர் செல்ல சூஃபியா மஃதனிக்கு மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவி்ட்டார்.
read more...

"தூதுஆன்லைன்.காம்" உதய விழா மற்றும் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!

அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)

இன்ஷா அல்லாஹ், வருகிற மார்ச் 15ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.

அத்தோடு பாலைவனத்தூது நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.

இதுவரை பாலைவனத்தூது வலைப்பூவில் 7,000-த்திற்கும் மேற்பட்ட செய்திகளும், கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன!. ஏப்ரல் 2009 முதல் தற்போது வரை, சுமார் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வருகைகள் பதிவாகியுள்ளன என்பதையும் இந்த சந்தோஷமான தருணத்தில் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கின்றோம்.

பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

பாலைவனத் தூதுக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் அருமைச் சகோதரர்களின் இம்மை, மறுமை வெற்றிக்காக வல்ல இறைவனிடம் இதயங்கனிந்து இறைஞ்சுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தூது குடும்பம்

read more...

13 மார்., 2011

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தூதிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் நமது தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்புப் பேட்டி.

கேள்வி:மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற அடிப்படையில் மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன?

பதில்:மாற்று அரசியல் என்பது எல்லா வகையிலும் மாற்று அரசியல். அதாவது, ஆடம்பர அரசியல் நிறுத்தப்பட வேண்டும், கட்அவுட் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நாங்கள் மாற்று அரசியலுக்கான முக்கிய விஷயங்களாக வைக்கிறோம். இதுமட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் வேட்பாளர்களை கூட தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். குறைந்தது எங்கள் கட்சியில் மூன்று ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சமுதாயத்திற்காக எத்தகைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் போன்ற இந்த அளவுகோலின்படி நாங்கள் எங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்கிறோம்.


ஆனால் இன்றைய அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தொகுதிகளை பணக்கார வேட்பாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பணமிருந்தால் ஒருவர் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ உறுப்பினராக செல்லமுடியும் என்ற நிலைமை இன்றைய இந்திய அரசியலில் இருக்கிறது.

கேள்வி:அ.இ.அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்துள்ள நீங்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக என்னென்ன கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்? அவற்றை நிறைவேற்றுவதாக அவர்கள் வாக்களித்துள்ளார்களா?

பதில்:அதாவது செல்வி.ஜெயலலிதா அவர்களை நாம் சந்தித்தபோது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடை 3.5% யிலிருந்து கூடுதலாக ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

இரண்டாவதாக உருது முஸ்லிம்களுடைய பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கோடிட்டுக் காட்டி, அந்த உருது மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அடுத்ததாக தமிழக அரசு கொண்டுவந்த திருமணப் பதிவுச்சட்டத்தில் பல விஷயங்கள் முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்ற காரணத்தினால், அதையும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கின்ற போது முஸ்லிம்களுடைய வேண்டுகோளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

கேள்வி:வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். இத்தேர்தலில் பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்கள்தாம் உங்களது இலக்கு. பொதுவாகவே அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மீது தமிழக முஸ்லிம்களுக்கு வெறுப்பு உள்ளதே. காரணங்கள் உங்களுக்கு தெரிந்ததுதான். குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியை நேரில் சென்று வாழ்த்தியது, வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தது, முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை எனக் கூறியது, கோத்ரா ரெயில் எரிப்புக்கு சிறுபான்மை மக்கள் மீது பழி போட்டது, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் கரசேவைக்கு அனுமதியளிக்கக் கோரியது உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இரு திராவிடக் கட்சிகளுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாலும்
கூட அ.இ.அ.தி.மு.க.விடம் கொஞ்சம் அதிகமாக ஹிந்துத்துவா சாயல் தென்படுகிறதே?

பதில்:செல்வி.ஜெயலலிதா அவர்களின் மீது கடந்த காலத்தில் நாங்கள் வைத்த எந்த விமர்சனத்தையும் வாபஸ் பெறவில்லை. அதே நேரம் ஜெயலலிதா அவர்களின் மீது எத்தகைய குற்றச்சாட்டை நீங்கள் அடுக்குகிறீர்களோ அதே குற்றச்சாட்டு கருணாநிதிக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். பாபர் மஸ்ஜித் விஷயத்தில். அவர்கள் வந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தினார்கள். ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டுத்தான் அங்கே கோயில் கட்டவேண்டும் என்று சொன்னார்களா என்று கேட்டோமென்றால் அதற்கு ஜெயலலிதா மறுப்பு தெரிவிக்கிறார். நான் அப்படிச் சொல்லவேயில்லை. தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பேசும் பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை என்று ஜெயலலிதா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இரண்டாவது விசயம் அவங்க வந்து மோடிக்கு விருந்து கொடுத்தாங்க, பா.ஜ.க அரசோடு உறவு வைத்தாங்க என்றெல்லாம் சொல்றீங்க, அது சம்மந்தமாக எங்களுடைய தாய்கழகம் தமுமுக எத்தகைய விமர்சனங்களை ஜெயலலிதா மீது முன் வைத்ததோ அந்த விமர்சனங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அதை நாங்கள் வாபஸ் பெறவில்லை.

ஆனால் கடந்த காலங்களில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததில் கலைஞர்தான் முன்னின்றார். அதிகமாக 13 மாதங்கள்தான் ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ஆனால் கலைஞர் அவர்கள் ஏறத்தாழ முழுமையான காலங்களில் பா.ஜ.க.வுடைய கூட்டணியில் நீடித்து எல்லா பதவி சுகங்களையும் பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஜெயலலிதா விருந்து வைத்தது குற்றம் என்று சொன்னால், கலைஞர் கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த காலத்தில்தான் குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆக, விருந்து வைத்தது ஒரு குற்றம் என்பதை விமர்சிக்கின்ற நேரத்தில், அதை மட்டுமே குற்றமாகப் பார்க்கக்கூடியவர்கள் ஏன் பா.ஜ.க.வின் கூட்டணியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்காளியாக இருந்தபோது 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

கலவரம் பற்றி எரிந்த அந்த நேரத்தில் மத்திய கூட்டணியில் கலைஞரோடு பங்காளியாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குஜராத் கலவரத்தைக் கண்டித்து கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார். ஏன் கலைஞர் அதைப் போன்று செய்யவில்லை? இப்போது ஜெயலலிதாவை குற்றம் சுமத்துபவர்கள் அதே குற்றச்சாட்டை ஏன் கலைஞர் மீது வைக்கவில்லை?

கேள்வி:இந்தியாவில் அதிகாரத்திலிருந்து வெளியே நின்றுக்கொண்டிருக்கும் நிலைமைதான் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாவதால் மனித வளம்,பொருளாதாரம், முயற்சிகள் எல்லாம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளதல்லவா? அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து அரசியல் களத்தில்
செயல்பட முடியாதா? அவ்வாறு உருவானால் உங்களுடைய பதில் எவ்வாறிருக்கும்?

பதில்:
பதில்:அதாவது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கூட்டுக் குடும்பத்தை உங்களால் நடத்த முடிகிறதா? 25 நபர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை உங்களால் ஒன்றுபட்டு வழிநடத்த முடியவில்லை. 5000 முஸ்லிம்கள் உள்ள ஒரு ஊரில் ஒரு ஐக்கிய ஜமாஅத்தை நிறுவுவதற்கு அந்த முஸ்லிம்கள் கஷ்டப்படுறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இன்றைக்கு 60 லட்சம் முஸ்லிம்கள் இருக்கக்கூடிய தமிழகத்தில் எல்லாரும் ஒரே நிலையில் இருக்கிறார்களா என்பது சாத்தியக் குறைவு.

ஆனால் எங்களுடைய கனவுத் திட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாரும் வெவ்வேறு அமைப்புகளை நடத்துவதில் தவறில்லை. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு பணிகளைச் செய்வதும் தவறில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பொதுவான நிலைப்பாடுகளில் ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்ற கனவுத் திட்டத்தில் எங்களுடைய தாய்கழகம் தமுமுக இருக்கிறது. அதை இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு முன்னால் ம.ம.க. எந்த முஸ்லிம் அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதாவது ஒட்டுமொத்த முஸ்லிம் இயக்கங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கூட்டணி முடிவாகி சீட் ஒதுக்கப்பட்ட பிறகு நீங்கள் ஆதரவு கேட்பதாகக் கூறப்படுவது பற்றி?

பதில்:இந்தக் குற்றச்சாட்டு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், நாங்கள் தமிழகத்தில் இருக்கக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் வலுவான ஒரு அமைப்பு என்பது சமுதாயம் ஏற்றுக்கொண்ட உண்மை. அப்படி இருக்கின்ற பொழுது எங்களுக்கு என்று ஒரு செயற்குழு இருக்கின்றது, ஒரு பொதுக்குழு இருக்கின்றது. அந்தச் செயற்குழுவும் பொதுக்குழுவும் எதைச் சொல்கிறதோ அதைத்தான் எங்களுடைய உயர்நிலைக்குழு தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் தொகுதிப் பேச்சுவார்த்தையை நாங்கள் சென்று நடத்துறோம்.

எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஏன் போகவில்லை என்று சொன்னால், நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லோரும் என்ன சொல்றாங்க என்று சொன்னால் நான் உம்மி கொண்டு வரேன், நீ அரிசி கொண்டுவா என்கிறார்கள். பத்து அமைப்புகள் சேர்ந்து போகும்போது பத்து அமைப்புகளுக்கும் என்ன பின்னணி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

கேள்வி:அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த நடந்த முயற்சிகள் பற்றி?

பதில்:திருவளச்சேரியில் கடந்த ரமலானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில், தமிழகத்தில் 19 இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதில் தாய்க் கழகமான தமுமுகவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த அடிப்படையில் குஜராத் கலவரம் நடந்த நேரத்தில்கூட தமுமுகவும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்து பல கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றினோம். கண்டன மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவதற்கு காரணமாக இருந்தோம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பாற்பட்டு சமுதாய அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கலந்தாய்வு அடிக்கடி நடத்தப்பட வேண்டும், ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எங்களுக்கு இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக அதை செயல்படுத்துவோம்.

கேள்வி:தமிழக முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 3.5
சதவீதம் இடஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அரசு வழங்கியுள்ளது. இதற்காக நீங்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா கூட நடத்தியுள்ளீர்கள். இதனை ஒரு சாதனையாக கலைஞர் கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பிரச்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு பாதிப்பு வராதா?


பதில்:நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனெனில் கலைஞர் விரும்பி அவராக இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. கேரளாவில் முஸ்லிம்கள் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், கர்நாடகாவில் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், ஆனால் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெடிய போராட்டங்களை நடத்தியது, நம்மைப் போன்ற வேறு சில சமுதாய அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திய பிறகு, போராட்டத்தின் நெருக்கடி தாங்காமல்தான் கலைஞர் இடஒதுக்கீடு தந்தார் என்பது உண்மை. குறிப்பாக 2007ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நாங்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாஷா அவர்களின் கல்லூரியில் மாநிலப் பொதுக்குழுவை நடத்தினோம். அந்த பொதுக் குழுவில் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தபோது இறுதி எச்சரிக்கை கலைஞருக்கு விடுத்தோம். 2007 டிசம்பர் 31க்குள் நீங்கள் இடஒதுக்கீடு தரவில்லை என்று சொன்னால், டாக்டர் ராமதாஸ் எத்தகைய வீரியமிக்க போராட்டங்களை களத்தில் எடுத்தாரோ அதை விட பன்மடங்கு வீரியமிக்க போராட்டங்களை நாங்கள் களத்தில் முன்னெடுப்போம், சாலைகளை மறிப்போம், ரயில்கள் ஓடாது, விமான நிலையங்களை முற்றுகை இடுவோம், கேபிள் வயர்களைக் கூட அறுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அந்த பொதுக் குழுவில் விடுத்தோம். அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களில்தான் கலைஞர் இடஒதுக்கீட்டை தந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆக ஒரு பெரிய நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திய பிறகுதான் கலைஞர் கொடுத்தாரே தவிர மனமுவந்து கொடுக்கவில்லை.

கேள்வி:வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு நியமித்த ஆணையம் அமைக்கும் முயற்சியில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா?

பதில்:ஏறத்தாழ கடந்த 10 வருடங்களாக எங்களுடைய மாநில பொதுக்குழுவில், செயற்குழுவில் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுகின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைக்கின்ற பொழுது, நிச்சயமாக மனிதநேய மக்கள் கட்சி இந்த வெளிநாட்டு தொழிலாளர்களுடைய வாரியத்தை தனி அமைச்சகமாக ஆக்கி, எப்படி மலையாளிகள் கேரளாவில் தனி அமைச்சகமாக வைத்திருக்கிறார்களோ அதேபோல் மாற்றி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கம்பெனிகள் இங்கேயே நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கு அதை சட்டமாக்குவதற்கு நாங்கள் முழுமையாக போராடுவோம்.

கேள்வி:ஒரு சமுதாய அமைப்பு தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்போவதாகப் பற்றி?

பதில்:கலைஞர் கருணாநிதியாலும் நிராகரிக்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக தாங்களும் அரசியல் களத்தில் உயிரோட்டமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய முடிவுகளையெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே இந்தச் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடந்து நிராகரிக்கப்படுவார்கள். அவர்களால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பதை இன்ஷா அல்லாஹ் சட்டமன்றத் தேர்தலின் களம் நிரூபிக்கும்.

கேள்வி:எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்? அதனை இறுதி செய்து விட்டீர்களா?

பதில்: 15 தொகுதிகளை அடையாளம் காட்டி அதிலிருந்து 3 தொகுதிகளை இறுதி செய்திருக்கிறோம். அந்த தொகுதிகள் எது என்பதை ஊடகங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் இருக்கிறது. விரைவில் அநேகமாக ஒரு வாரத்தில் அந்தச் செய்தி வெளிவரும்.
read more...

லிபியா மோதல்:அல்ஜஸீரா கேமராமேன் பலி

திரிபோலி,மார்ச்.13:கிழக்கு லிபியாவில் எதிர்ப்பாளர்களுக்கு அதிக செல்வாக்கு மிகுந்த நகரமான பெங்காசியில் நடந்த தாக்குதலில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் கேமராமேன் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய பெயர் அலி ஹஸன் அல் ஜபேர்.

பெங்காசிக்கு அருகே ஹவாரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. லிபியாவில் அரசுக்கெதிராக போராட்டம் துவங்கி முதல் முறையாக ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலி ஹஸன் அல் ஜபேரை தாக்கியது யார் என்பதுக் குறித்து அல்ஜஸீரா தெரிவிக்கவில்லை. ஆனால், இக்கொலைக்கு காரணமானவர்களை வெகு விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என அல்ஜஸீராவின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

ஹவாரியில் எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை படம் பிடித்த பின்னர் பெங்காசிக்கு திரும்பும் வழியில் ஜபேரின் மீது தாக்குதல் நடந்தது. ஜபேருடனிருந்து இன்னொரு நபருரையும் துப்பாக்கிக் குண்டு தாக்கியது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த பொழுதிலும், ஜபேரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

செய்தி:மாத்யமம்
read more...

ஜப்பானின் ஐந்து அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில்​ - நாடு முழுவதும் பீதி

டோக்கியோ,மார்ச்.13:ஜப்பானில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து புகஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் அதிகரித்துள்ளதால் அந்நாடு அணு விபத்து பீதியில் ஆழ்ந்துள்ளது.

40 ஆண்டுகள் பழமையான புகஷிமா அணுசக்தி நிலையத்தின் முதல் அணு உலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. பூகம்பத்தால் சேதமடைந்த அணு உலையின் மேல்பகுதி வெடித்துச் சிதறியதால் அப்பிரதேசம் முழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று,இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. வெப்பத்தைக் குறைத்து வெடிப்பை தவிர்ப்பதற்கான கடுமையான முயற்சியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் போராடி வருகின்றனர்.

மொத்தம் 6 அணு உலைகளைக் கொண்ட புகஷிமா அணுமின் நிலையத்தில் மேலும் 3 அணு உலைகள் வெப்பக்கட்டுப்பாடு கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இத்துடன் 5 அணு உலைகளும் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அணு உலைகளில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழக்கும் பொழுது வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்படும்.

அணுமின் நிலையம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 170000 பேர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணுசக்தி நிலையத்திலிருந்து கதிர் வீச்சு கசிந்தால் நீண்டகாலமாக துயரத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். உயிருள்ளவையெல்லாம் அழிந்துபோகுமளவுக்கு சக்திக்கொண்ட அணுசக்தி கதிர்வீச்சினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பல ஆண்டுகள் தொடரும். நாட்டை பெரும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் 17 அணுசக்தி நிலையங்களில் மொத்தம் 53 அணு உலைகள் செயல்படுகின்றன. நாட்டின் மின்சாரத் தேவையில் 35 சதவீதத்தை பூர்த்திச் செய்வது அணுசக்தியாகும்.
read more...

சவூதியில் சிறை:இந்திய ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழக பெண்

ஜித்தா,மார்ச்.13:சல்மா அப்துல் அஸீஸ், இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விடுகிறார். சவூதியில் கடந்த ஒன்றை வருடங்களாக கடுமையான உடல் மற்றும் மனரீதியிலான கொடுமைக்கு ஆளான சல்மா இந்திய ஃபெடர்னிடி உதவியுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு திரும்பியுள்ளார்.

இந்தியாவைச் சார்ந்த பெண்கள் பல்வேறு அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக வீட்டுவேலைக்காக செல்கின்றனர். இவர்களில் சிலர் பல துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தங்களின் வீட்டு நிலைமையை கருத்தில்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் காசை சம்பாத்தித்து சொந்த ஊருக்கு அனுப்பும் இப்பெண்களில் பலருக்கு ஏற்படும் மனரீதியான, உடல்ரீதியான உளைச்சல்கள் ஏராளம். அதில் ஒருவர்தாம் சல்மா.

கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக சவூதிஅரேபியாவின் மதீனா நகருக்கு ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார் அவர். அவ்வீட்டினரின் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளான சல்மா, கொடுமைகளை பொறுக்கமுடியாமல் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வேறொருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவர் நல்ல மனிதர். ஒரு முறை சல்மா மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவிக்கு செல்லும்பொழுது போலீசாரால் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். அப்பொழுது அவரிடமிருந்த ஆவணங்களை பரிசோதித்த பொழுது அவை காலவதியாகிவிட்டன. தொடர்ந்து இவர் மதீனா சிறையில் 6 மாதகாலமாக அடைக்கப்பட்டார். பின்னர் ஜித்தா நகரில் தர்ஹீலுக்கு மாற்றப்பட்டார்.

அப்பாவியான சல்மாவின் பரிதாபமான நிலையை அறிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று சல்மாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவருக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். சல்மாவை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தடையாக இருந்த அனைத்து சட்டரீதியான பிரச்சனைகளையும் வேகமாக முடித்துக் கொடுத்தது இந்திய தூதரகம்.

இதனைத் தொடர்ந்து நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் தனது சொந்த ஊருக்கு வந்திறங்கினார் சல்மா. தனது நிற்கதியான சூழலை அறிந்து சிறையிலிருந்து விடுவித்து நாடு திரும்ப உதவிய இந்தியா ஃபெடர்னி ஃபாரத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் சல்மா.

Twocircles.net
read more...

யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்

ஸன்ஆ,மார்ச்.13:அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எதிர்ப்பாளர்களின் தலைநகர் முகாமில் யெமன் போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.

கண்ணீர் குண்டும், தண்ணீர் பீரங்கியும் உபயோகித்து தலைநகரிலிருந்து எதிர்ப்பாளர்களை வெளியேற்ற முயன்ற நடவடிக்கையில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.

எதிர்ப்பாளர்களின் முகாம்களில் போலீஸ் அத்துமீறி நுழைந்தது. குண்டடிப்பட்டு மக்கள் இறந்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகாமிலிருந்து மருத்துவர்களை பிணைக் கைதிகளாக்கியது போலீஸ். வீதிகளில் மோதல் நீண்ட நேரம் நீடித்தது.

பாராளுமன்ற முறைக்கு மாறுவதற்கு உகந்த வகையில் அரசியல் சட்டம் திருத்தப்படும் என கடந்த வியாழக்கிழமை யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

எகிப்து:60 அரசியல் கைதிகள் விடுதலை

கெய்ரோ,மார்ச்.13:எகிப்தில் ராணுவ அரசு 60 அரசியல் கைதிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளது. தண்டனைக் காலத்தில் பாதியை பூர்த்திச் செய்தவர்கள் விடுதலைச் செய்யப்படுவோரின் பட்டியலில் இடம்பெறுவர்.

இதில் 1981-ஆம் ஆண்டு அன்வர்சாதாத்தின் ஆட்சியின் போது தண்டிக்கப்பட்டவர்களும், மன்னிப்பு வழங்கப்பட்டோரும் உட்படுவர்.

ராணுவ அரசின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு சட்ட அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைச் செய்யப்படுவோரை போலீஸ் கண்காணிக்கக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...

சீனா:போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் தேசத்துரோக வழக்கில் கைது

பீஜிங்,மார்ச்.13:மேற்காசியாவில் நடந்துவரும் மக்கள் எழுச்சியை முன்மாதிரியாகக் கொண்டு இணையதளத்தில் சீனாவில் போராட்டத்தி்ற்கு அழைப்பு விடுத்த இளைஞர் ஒருவரை சீன போலீஸ் கைது செய்துள்ளது.

ஜியோ வீடோங் என்ற தன்னார்வ தொண்டு இளைஞரை தேசத்துரோக குற்றஞ்சுமத்தி ஹய்னிங்கிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது.

ஆட்சியை கவிழ்க்க முயன்றதால் வீடோங் கைது செய்யப்ப்பட்டதாக போலீஸ் பின்னர் அவருடைய மனைவிக்கு தெரிவித்தது. சீனாவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
read more...